ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதிலேயே உண்மை மகிழ்வு உள்ளது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
வாழ்வுப் பயணத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதில் நிலவும் இணக்கத்தின் கனியாக, உண்மை மகிழ்வு உணரப்படுகின்றது என, இச்சனிக்கிழமை, தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குடும்பங்களுக்காக குடும்பங்கள் என்ற பெயரில் செப்டம்பர் 11ம் தேதி, தேசிய திருப்பயண நாள் இத்தாலியில் சிறப்பிக்கப்படுவதையொட்டி, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பத்தில் ஒருவர் ஒருவரிடையே நிலவும் இணைக்க வாழ்வின் கனியாக, நாம் உண்மை மகிழ்வை அனுபவிக்கின்றோம், அது, வாழ்வுப் பயணத்தில் ஒன்றித்திருப்பதன் சுவையை நமக்குத் தருகின்றது என, அதில் கூறியுள்ளதோடு, மகிழ்வின் அடிப்படை என்பது, எப்போதும் இறைவனோடு இருப்பதாகும் என மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செப்டம்பர் 11ம் தேதி, இச்சனிக்கிழமை திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டரில், சுற்றுச்சூழல் குறித்த அணுகுமுறை என்பது, நீதியை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் குறித்த கலந்துரையாடலை இணைத்த சமுதாய அணுகுமுறையாக இருக்கவேண்டும், அதன் வழியாக, இயற்கையின் அழுகுரலுக்கும் ஏழைகளின் அழுகுரலுக்கும் நாம் செவிமடுக்க முடியும் என எழுதியுள்ளார்.
இதற்கிடையே, இஞ்ஞாயிற்றுக்கிழமை ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட், மற்றும் சுலோவாக்கியா நாட்டில், தான் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப்பயணத்திற்கு முன்னர், அன்னை மரியாவிடம் செபிக்கும் நோக்கத்துடன், செப்டம்பர் 10, வெள்ளிக்கிழமை மாலை, உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 7 மணிக்கு மேரி மேஜர் பெருங்கோவில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்குள்ள Salus Populi Romani அன்னை மரியா திருவுருவத்தின் முன்னர் நின்று, தன் திருத்தூதுப்பயணத்தின் நோக்கம் நிறைவேற அன்னை மரியாவின் உதவியை வேண்டினார்.