தேடுதல்

திருநற்கருணை திருநற்கருணை 

திருநற்கருணை மாநாட்டின் துவக்கமாக வறியோருக்கு விருந்து

செப்டம்பர் 04, சனிக்கிழமையன்று, புடாபெஸ்ட் மற்றும், ஹங்கேரியின் பெரும்பாலான மறைமாவட்டங்கள், உதவி தேவைப்படும் குடும்பங்கள், வயதுமுதிர்ந்தோர், மற்றும், தனியாக வாழ்வோர் போன்ற அனைவரையும் வரவேற்று அன்பு விருந்தளித்தன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 12, வருகிற ஞாயிறு முதல், 15ம் தேதி புதன் வரை, ஹங்கேரி மற்றும், சுலோவாக்கியா நாடுகளில், தான் மேற்கொள்ளவுள்ள திருத்தூதுப்பயணம் பற்றிய குறுஞ்செய்தி ஒன்றை, செப்டம்பர் 07, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“உலக திருநற்கருணை மாநாட்டை நிறைவுசெய்வதற்காக, வருகிற ஞாயிறன்று புடாபெஸ்ட் நகருக்குச் செல்லவிருக்கிறேன். அம்மாநாட்டை நிறைவுசெய்த பின்னர், எனது திருப்பயணம், சுலோவாக்கியா நாட்டில் சில நாள்கள் தொடர்ந்து நடைபெறும். அந்நாட்டின் பாதுகாவலரான, புகழ்பெற்ற, துயருறும் அன்னை மரியாவின் திருவிழாக் கொண்டாட்டங்களுடன் அப்பயணம் நிறைவுக்குவரும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹங்கேரி நாட்டுத் தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்றுவரும், 52வது உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவு திருப்பலியை, வருகிற ஞாயிறன்று நிறைவேற்றுவார். அதற்குப்பின்னர், ஹங்கேரியின் அண்டை நாடான சுலோவாக்கியா செல்வார். 

அன்பு விழா

மேலும், செப்டம்பர் 05, இஞ்ஞாயிறன்று, 52வது உலக திருநற்கருணை மாநாடு அதிகாரப்பூர்வமாகத் துவக்கப்படுவதற்கு முந்தைய நாளில், ஹங்கேரி நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களும், உதவிதேவைப்படும் நிலையில் இருக்கும், ஏறத்தாழ ஐந்தாயிரம் பேரை வரவேற்று விருந்தளித்துள்ளன.

எஸ்டர்காம்-புடாபெஸ்ட் பேராயரான கர்தினால் பீட்டர் எர்டோ அவர்கள், புடாபெஸ்ட் நகரின், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் வளாகத்தில், தேவையில் இருப்போருக்கு உணவு வழங்கும் நிகழ்வைத் துவக்கிவைத்தார். இந்த அன்பு விழாவில், ஹங்கேரியின் வேளாண் துறை அமைச்சர் István Nagy, பாதுகாப்பு அமைச்சகத்தில், நாட்டின் செயலராகப் பணியாற்றும் István Szabó ஆகிய இருவர் உட்பட, பொதுமக்கள் பிரதிநிதிகள், தலத்திருஅவை பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்று, அனைவரோடும் இணைந்து உணவு உண்டனர்.

இன்னல்களோடு வாழ்கின்ற மக்களை, அவற்றுக்கு மத்தியில், பொதுவான விருந்து கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியில் பங்குகொள்ள வைக்கும் நோக்கத்தில், இந்த அன்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 04, சனிக்கிழமையன்று, புடாபெஸ்ட் மற்றும், ஹங்கேரியின் பெரும்பாலான மறைமாவட்டங்கள், உதவி தேவைப்படும் குடும்பங்கள், வயதுமுதிர்ந்தோர், மற்றும், தனியாக வாழ்வோர் போன்ற அனைவரையும் வரவேற்று அன்பு விருந்தளித்தன.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2021, 14:57