தேடுதல்

சுலோவாக்கியா இளையோருக்கு திருத்தந்தை வழங்கிய உரை

நாம் எத்தகைய வாழ்வை விரும்புகிறோம் என்பதை நம் கனவுகளே வெளிப்படுத்துகின்றன. மிகப்பெரும் மகிழ்வுக்காக நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்பு இளையோரே, சகோதரர்களே, சகோதரிகளே, உங்களோடு உரையாட நான் வந்துள்ள இவ்வேளையில், என்னிடம் மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளீர்கள். உங்கள் உதவியுடன் அவைகளுக்கு பதில் சொல்ல முனைகிறேன். இருவரிடையே நிலவும் அன்பு குறித்து Peter, மற்றும் Zuzka எழுப்பிய கேள்விக்கு பதிலுரைக்க விரும்புகிறேன்.

அன்பு என்பது நம் வாழ்வின் மிகப்பெரும் கனவாக உள்ளது, ஆனால் அது சுலபமாக கிட்டுவதில்லை. நீங்களே உங்கள் கேள்வியில் கூறியதுபோல், அனைத்தையும் புது கண் கொண்டு பார்க்கவேண்டும். அன்பு என்பது, அனுபவித்துவிட்டு தூக்கியெறியும் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல, மாறாக, விசுவாசமாக இருப்பதைக் குறிக்கும் அது, ஒரு கொடையாகவும், பொறுப்புணர்வாகவும் உள்ளது.

ஏதோ வந்தோம் சென்றோம் என்பதற்காக அல்ல, மாறாக, நம் வாழ்வில் ஏதாவது ஒன்றை உருவாக்குவதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எப்போதுமே, இரு விடயங்கள் ஒன்றிணைந்துச் செல்வதைப்பற்றிப் படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம். அவை, அன்பும், வீரத்துவ செயல்பாடுகளும். நம் வாழ்வும் சிறப்புடன் விளங்கவேண்டுமானால், அன்பும், வீரத்துவமும் இன்றியமையாதவை. சிலுவையில் அறையுண்ட இயேசுவிலும், நம்மீது அவர் கொண்ட அளவுகடந்த அன்பையும், நமக்காக தன் உயிரையே தரத் துணிந்த உறுதியையும் காண்கிறோம். நம் அருளாளர் Anna Kolesárová அவர்களும், இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.

அன்பைக் குறித்து கனவுகாணும்போது, ஒரு குடும்பத்தை உருவாக்குவது, குழந்தைகளை வளர்ப்பது, இன்னொருவருடன் அனைத்தையும் பகிர்வது, ஆகியவைக் குறித்து கனவு காணுங்கள். உங்கள் தவறுகள், குறைபாடுகள் குறித்து வெட்கம் வேண்டாம். உங்களை உங்களுக்காகவே ஏற்றுக்கொள்ள எப்போதும் ஒருவர் காத்திருக்கிறார். நாம் எத்தகைய வாழ்வை விரும்புகிறோம் என்பதை நம் கனவுகளே வெளிப்படுத்துகின்றன. மிகப்பெரும் மகிழ்வுக்காக நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். நம் நிலையிலேயே அனபுக் கூரப்படவும், பிறரை அன்புகூரவும் நாம் படைக்கப்பட்டுள்ளோம்.

நம் அன்பு கனிவழங்க வேண்டுமானால், நம் வேர்கள் மறக்கப்படாமல் இருக்க வேண்டும். நாம் உருவாகி வந்தச் சூழலை நமக்கென உருவாக்கித் தந்தவர்கள், நம் பெற்றோர், குறிப்பாக, நம் தாத்தா பாட்டிகள். அந்த வேர்களை பேணி காக்கவேண்டும். நம் தாத்தா பாட்டியை சந்தித்து அவர்களோடு உரையாடவேண்டும், அவர்களின் அனுபவங்களுக்குச் செவிமடுக்க வேண்டும்.

நாம் எதிர்கொள்பவை சரியில்லாதபோது, நம்மைச்சுற்றி தீமைகளைக் காணும்போது, நம்மால் எதையும் மாற்றமுடியாது என பிறர் கூறும்போது, மனம்தளராதிருப்போம். அவநம்பிக்கைக்குள் நம்மை இழக்க அனுமதியாதிருப்போம்.

நாம் பாவங்கள் குறித்து மனத்தளர்வுடன் இருக்கும்போது, என்னச் செய்யவேண்டும் என எண்ணுகிறீர்கள்? ஒப்புரவு அருள்சாதனத்தை நோக்கிச்செல்வது சிறந்த வழி. நம் பாவங்களை எண்ணியவர்களாக, தண்டனையையும் அவமானப்படுத்தலையும் நோக்கி நாம் இங்குச் செல்லவில்லை. மாறாக, நாமோ, குழந்தைகளாக ஒரு தந்தையின் நீட்டிய அன்பு நிறை கரங்களை நோக்கிச் செல்கிறோம். எந்த ஒருச் சூழ்நிலையிலும் நம்மை தூக்கி நிறுத்தும் இறைவன் நம் பாவங்களை மன்னிக்கிறார்.

ஒவ்வொரு முறையும், ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெற்றபின்னர், சிறிது நேரம் நின்று, நாம் பெற்றுள்ள மன்னிப்பு குறித்து ஆழமாகச் சிந்திப்போம். ஒப்புரவு அருளடையாளத்தின்போது, நாம் ஒரு நீதிபதியின் முன் அல்ல, மாறாக, நம்மை அன்புகூர்ந்து, குணப்படுத்தும் இயேசுவின் முன் செல்கிறோம் என்பதை எண்ணிப் பார்ப்போம்.

என் பாவங்களை எண்ணி நான் வெட்கப்படுகிறேன், ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறச் செல்வது எனக்கு சங்கடமாக உள்ளது, என சிலர் சொல்லக்கூடும். பாவம் குறித்த அவமான உணர்வுகள், உங்களை சிறைப்படுத்தாதிருக்கட்டும். ஏனெனில், கடவுள் உங்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை. அவர் உங்கள் குறைகளைப் பார்ப்பதில்லை, மாறாக, உங்களை அன்புகூர்வதிலேயே கருத்தாக இருக்கிறார்.

'ஒரே பாவத்தில் மீண்டும் மீண்டும் விழும் என்னை என்னாலேயே மன்னிக்க முடியவில்லை, கடவுள் எப்படி மன்னிப்பார்', என நீங்கள் கேள்வி கேட்கலாம். கடவுள் நம்மை மன்னிக்கமாட்டார் என எண்ணும்போது நாம் அவரைக் காயப்படுத்துகிறோம். ஏனெனில் இது, நாம் அவரை நோக்கி 'உம் அன்பு பலம்பொருந்தியதாக இல்லை' என கூறுவதுபோல் உள்ளது. கடவுள் நம்மை மீண்டும் மீண்டும் மன்னிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். நம்மை அவர், பாவிகள் என்று முத்திரைக் குத்துவதில்லை, மாறாக, அன்புகூரப்பட வேண்டிய குழந்தைகளாக நம்மைப் பார்க்கிறார்.

இறுதியாக, Peter மற்றும் Lenkaவின் சான்றுபகிர்தல் குறித்து பேச விழைகிறேன். சிலுவையை உங்கள் வாழ்வில் அனுபவித்ததாகக் கூறுகிறீர்கள். அஞ்சாமல் சிலுவையை அரவணைத்துக்கொள்ள இளையோர் எவ்வாறு ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளீர்கள். அரவணைத்தல் என்பது, அச்சத்தைக் கைவிட உதவுகிறது. ஒருவர் நம்மை அரவணைக்கும்போது, நாம் நமக்குள்ளும், நம் வாழ்வு குறித்தும் தன்னம்பிக்கையைப் பெறுகின்றோம். ஆகவே, இயேசுவால் அரவணைக்கப்பட நாம் நம்மையே அனுமதிப்போம். ஏனெனில், நாம் இயேசுவை அரவணைக்கும்போது, மீண்டும் ஒருமுறை நம்பிக்கையை அரவணைக்கிறோம். சிலுவையை அரவணைப்போம், தனியாக அல்ல, இயேசுவோடு இணைந்து. இயேசுவை நாம் அரவணைக்கும்போது, மகிழ்வு நம்மில் மீண்டும் பிறக்கிறது.  இயேசுவின் இந்த மகிழ்வு, துயரங்களின் மத்தியிலும் அமைதியைக் கண்டுகொள்ள நமக்கு உதவட்டும். எனக்கு செவிமடுத்ததற்கு நன்றி. எனக்காக செபிக்க மறவாதீர்கள்.

15 September 2021, 13:00