தேடுதல்

Šaštín தேசியத் திருத்தலத்தில் துயருறும் அன்னை மரியாவின் திரு உருவத்திற்குமுன் திருத்தந்தை பிரான்சிஸ் Šaštín தேசியத் திருத்தலத்தில் துயருறும் அன்னை மரியாவின் திரு உருவத்திற்குமுன் திருத்தந்தை பிரான்சிஸ் 

சுலோவாக்கியா ஆயர்களுடன் இணைந்து திருத்தந்தையின் செபம்

Šaštín தேசியத் திருத்தலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியா நாட்டை, அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கும் செபம் ஒன்றை, அந்நாட்டு ஆயர்களுடன் இணைந்து சொன்னார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுலோவாக்கியா நாட்டின் பாதுகாவலரான துயருறும் அன்னை மரியாவின் திருநாள் செப்டம்பர் 15ம் தேதி, இப்புதனன்று, சிறப்பிக்கப்பட்ட வேளையில், அந்த அன்னையின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள Šaštín தேசியத் திருத்தலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியா நாட்டை, அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கும் செபம் ஒன்றை, அந்நாட்டு ஆயர்களுடன் இணைந்து சொன்னார்:

ஏழு துயரங்களின் எங்கள் அன்னையே, சகோதரர்களாக உம் திருமுன் கூடிவந்து, ஆண்டவரின் கருணைமிகு அன்பிற்காக நன்றிகூறுகிறோம். அன்று, திருத்தூதர்களுடன் மேலறையில் நீர் இருந்ததுபோல், இங்கு எங்களோடு இருக்கிறீர்.

திருஅவையின் அன்னையே, துயருறுவோரின் ஆறுதலே, எங்கள் பணியின் மகிழ்வுகளிலும், துயர்களிலும், உம்மிடம் நம்பிக்கையோடு வந்துள்ளோம். எங்களை கனிவுடன் கண்ணோக்கி, எங்களை அரவணைக்க உங்கள் கரங்களை விரித்தருளும்.

திருத்தூதர்களின் அரசியே, பாவிகளின் புகலிடமே, எங்கள் மனித எல்லைகளையும், ஆன்மீக குறைகளையும், தனிமையில் நாங்கள் அடையும் துயர்களையும் நீர் அறிவீர். உமது கனிவான தொடுதலால் எங்கள் காயங்களை குணமாக்கும்.

இறைவனின் அன்னையே, எங்கள் அன்னையே, உம்மிடம், எங்கள் வாழ்வையும், எங்கள் நாட்டையும் கையளிக்கிறோம். ஆயர்களாகிய எங்களிடையே இருக்கும் ஒருங்கிணைப்பை, உம்மிடம் ஒப்படைக்கிறோம். உமது மகன் எங்களுக்குச் சொல்லித்தந்தவற்றை பிரமாணிக்கமுடன் செயல்படுத்த எங்களுக்கு வரங்களைப் பெற்றுத்தாரும்.

உம மகன் எங்களுக்குச் சொல்லித்தந்த சொற்களில், அவர் வழியாக, நாங்கள் தந்தையிடம் வேண்டுகிறோம்.

இவ்வாறு அன்னை மரியாவிடம் செபித்த திருத்தந்தையும் ஆயர்களும், 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்ற செபத்தை இணைந்து செபித்தனர். இறுதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பின்வரும் செபத்தை கூறி, இந்த அர்ப்பணிப்பு நிகழ்வை நிறைவு செய்தார்:

இறைவா, அன்னை மரியாவைப் பின்பற்றி, கிறிஸ்துவின் பாடுகளை தியானிப்பதற்கு, உமது திருஅவையை நீர் அழைக்கிறீர். அவரது பரிந்துரையால், நாங்கள், உமது ஒரே திருமகனின் சாயலை, இன்னும் அதிகமாக தாங்கி, அவரது அருளின் நிறைவைப் பெறுவோமாக. என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி புரியும் அவர் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2021, 13:07