தேடுதல்

கர்தினால் Jorge Liberato Urosa Savino கர்தினால் Jorge Liberato Urosa Savino  

வெனெசுவேலா கர்தினால் Urosa Savino இறப்புக்கு இரங்கல்

கர்தினால் Urosa Savino அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 218 ஆகவும், இவர்களில் எண்பது வயதுக்குட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆகவும் மாறின

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 23, இவ்வியாழனன்று தனது 79வது வயதில் இறைவனடி சேர்ந்த, வெனெசுவேலா நாட்டு கர்தினால் Jorge Liberato Urosa Savino அவர்களின் ஆன்மா நிறையமைதி அடைய இறைவேண்டல் செய்வதாகவும், அவர் திருஅவைக்கு ஆற்றியுள்ள சிறப்பான பணிகளுக்கு நன்றி கூறுவதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கரகாஸ் உயர்மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகப் பணியாற்றும், மெரிதா பேராயர் கர்தினால் பல்தசார் என்ரிக் போரஸ் கர்டோசா அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், கர்தினால் Urosa Savino அவர்களின் இறப்பால் வருந்தும் அனைவரோடும் தன் அருகாமையைத் தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான, வெனெசுவேலாவின் தலைநகர் கரகாசில் 1942ம் ஆண்டு பிறந்த கர்தினால் Urosa Savino அவர்கள், 1967ம் ஆண்டு அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், கரகாஸ் உயர்மறைமாவட்டத்தில், பல்வேறு மேய்ப்புப்பணிகளுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றியவர்.

El Hatillo நகரில் புனித யோசேப் அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியில் உதவி அதிபர் மற்றும் அதிபராகவும், வெனெசுவேலா அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரிகள் அமைப்பின் தலைவராகவும், இலத்தீன் அமெரிக்க அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரிகள் அமைப்பின் உதவித் தலைவராகவும், கர்தினால் Urosa Savino அவர்கள் பணியாற்றியுள்ளார்.

1982ம் ஆண்டில், கரகாஸ் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், 1990ம் ஆண்டில்  வலென்சியா உயர்மறைமாவட்ட பேராயராகவும், 2005ம் ஆண்டில் கரகாஸ் உயர்மறைமாவட்ட பேராயராகவும் நியமிக்கப்பட்ட கர்தினால் Urosa Savino அவர்கள், அதற்கு அடுத்த 2006ம் ஆண்டில் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார்.

2015ம் ஆண்டில், திருஅவையிலும், சமகால உலகிலும், குடும்பத்தின் அழைப்பும் பணியும் என்ற தலைப்பில் நடைபெற்ற 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்குபெற்றுள்ள கர்தினால் Urosa Savino அவர்கள், திருப்பீடத்தின் பொருளாதார விவகார அமைப்பை ஆய்வுசெய்யும் கர்தினால்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில், கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி கரகாஸ் நகரின் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த கர்தினால் Urosa Savino அவர்கள், செப்டம்பர் 23, இவ்வியாழனன்று, தனது 79வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.

நோயுற்ற காலங்களிலும், துன்புறும் வெனெசுவேலா மக்களோடு தன் அருகாமையைத் தெரிவித்துவந்த கர்தினால் Urosa Savino அவர்கள், அந்நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அமைதியான முறையில் தீர்ப்பதற்கு, அரசியலில் பொறுப்பு வகிப்பவர்கள், தனிப்பட்ட ஆதாயங்களைப் புறக்கணித்து, ஒன்றிணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்தினால் Urosa Savino அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 218 ஆகவும், இவர்களில் புதிய ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, எண்பது வயதுக்குட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆகவும் மாறின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2021, 15:31