தேடுதல்

சுலோவாக்கியாவின் ரோமா நாடோடி இனத்தவர்க்கு திருத்தந்தை உரை சுலோவாக்கியாவின் ரோமா நாடோடி இனத்தவர்க்கு திருத்தந்தை உரை   (Vatican Media)

ரோமா நாடோடி இனத்தவருக்கு திருத்தந்தை வழங்கிய உரை

திருத்தந்தை பிரான்சிஸ் - சகோதரர்களாக, சகோதரிகளாக திகழும் ஒரு குடும்பமே, திருஅவையின் இலக்கணம். திருஅவை ஓர் இல்லம், உங்கள் இல்லம். எனவே, நான் முழு உள்ளத்துடன் கூறுகிறேன்: நீங்கள் அனைவரும் இங்கு வரவேற்கப்படுகிறீர்கள்!

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுலோவாக்கியா நாட்டில், Košiceயில் வாழும் நாடோடி இனத்தவரான ரோமா குழுமத்தினரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 14, இச்செவ்வாய் பிற்பகலில் சந்தித்தபோது, அவர்களுக்கு வழங்கிய உரையின் சுருக்கம்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, தன் வாழ்க்கைத்துணையான Beáta அவர்களுடன் இங்கு வந்திருக்கும் Ján அவர்கள் பகிர்ந்துகொண்டபோது, உங்கள் இனத்தவரைக் குறித்து, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் கூறிய சொற்கள் என் நினைவுக்கு வந்தன. "திருஅவையில், நீங்கள் விளிம்புகளில் இல்லை, நீங்கள் திருஅவையின் இதயத்தில் இருக்கிறீர்கள்" என்று அவர் கூறியிருந்தார். இது வெறும் சொற்கள் அல்ல, இவ்விதம் வாழ்வதையே இறைவன் விரும்புகிறார். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறாக இருந்தாலும், அனைவரும், பிள்ளைகளாக, அவரைச்சுற்றி ஒன்றிணைந்து வருவதையே அவர் விரும்புகிறார். சகோதரர்களாக, சகோதரிகளாக திகழும் ஒரு குடும்பமே, திருஅவையின் இலக்கணம். திருஅவை ஓர் இல்லம், உங்கள் இல்லம். எனவே, நான் முழு உள்ளத்துடன் கூறுகிறேன்: நீங்கள் அனைவரும் இங்கு வரவேற்கப்படுகிறீர்கள்!

Ján, நீங்களும், உங்கள் துணைவியார் Beáta அவர்களும், என்னை வாழ்த்தினீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருப்பினும், நீங்கள் இருவரும், குடும்பம் என்ற கனவுக்கு, வாழும் அடையாளங்களாக இருக்கிறீர்கள். இருவரும் இணைந்து வாழ்வதன் வழியே, உங்களிடையே இருக்கும் முற்சார்பு எண்ணங்களையும், பிரச்சனைகளையும் புறந்தள்ளி வாழமுடியும் என்பதை உணர்த்துகிறீர்கள்.

அடுத்தவரை சரியாகப் புரிந்துகொள்வதற்குப் பதில், நம் முற்சார்பு எண்ணங்களால் அவர்களை எளிதில் தீர்ப்பிடுகிறோம். இயேசு, நற்செய்தியில் கூறும், "தீர்ப்பு அளிக்காதீர்கள்" (மத். 7:1) என்ற அறிவுரைக்கு செவிமடுப்போம். ஒவ்வொருவரும் இறைவனின் மகன், அல்லது மகள் என்ற அழகை உடையவர்கள், படைத்தவரின் சாயலைப் பெற்றிருப்பவர்கள். எனவே, அவர்களை நம் முற்சார்பு எண்ணங்களுக்குள் அடைத்துவைக்க முயலவேண்டாம்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, மக்களின் முற்சார்பு எண்ணங்களுக்கும், தவறான தீர்ப்புகளுக்கும், அதனால் வெளிப்படும், புண்படுத்தும் சொற்களுக்கும், செயல்பாடுகளுக்கும், நீங்கள் அடிக்கடி உள்ளாகியிருக்கிறீர்கள். முற்சார்பு எண்ணங்களிலிருந்து விடுபட்டு, உரையாடல் வழியே, மனிதமாண்பை நிலைநாட்டமுடியும். சமுதாயத்தில் ஒருங்கிணையமுடியும்.

இதை எவ்வாறு செய்வது என்பதை புரிந்துகொள்ள, Nikola மற்றும் René ஆகிய இருவரும் உதவி செய்துள்ளனர். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து, அத்தகைய ஆவலை, உங்கள் குழந்தைகளுக்கு வழங்க விரும்புகிறீர்கள். எனவே, நீங்கள் எங்களுக்கு ஒரு முக்கியச் செய்தியைத் தந்துள்ளீர்கள். எங்கு ஒருவர்மீது ஒருவருக்கு உண்மையான அக்கறை உள்ளதோ, எங்கு பொறுமை காட்டப்படுகிறதோ, அந்த உறவு பலன்கள் அளிக்கும் என்ற செய்தியை நீங்கள் தந்துள்ளீர்கள்.

நம் குழந்தைகள், பாகுபாடுகளையும், தடைகளையும் உணராமல், அனைவரோடும் இணைந்து வாழ்வதையே விரும்புகின்றனர். அவர்கள் எதிர்காலத்தில், சமுதாயத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ளபப்ட்டு, இணைந்து வாழ்வதற்கு, நாம், தற்போது, துணிவுடன் முடிவுகள் எடுக்கவேண்டியிருக்கும்.

அனைத்து இனத்தவரையும் ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்போருக்கு நன்றி சொல்ல விழைகிறேன். அன்பு அருள்பணியாளர்களே, துறவியரே, பொதுநிலையினரே, இத்தகைய ஒருங்கிணைப்பு பணிக்கென உங்கள் நேரத்தையும், சக்தியையும் பயன்படுத்தும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! விளிம்புகளில் வாழ்வோரை சமுதாயத்தின் மையத்திற்குக் கொணரும் உங்களுக்கு நன்றி. இவ்வேளையில், நான் புலம்பெயர்ந்தோரையும், சிறையில் இருப்போரையும் நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் அனைவரோடும், என் நெருக்கத்தை, இப்போது வெளிப்படுத்த விழைகிறேன்.

அருள்பணி பீட்டர் அவர்களே, நீங்கள் நடத்திவரும் மேய்ப்புப்பணி மையத்தைப்பற்றிக் கூறியதற்காக உங்களுக்கு நன்றி. விளிம்பில் வாழ்வோருக்காக, இந்த மையத்தில் பல்வேறு உதவிகள் செய்வதோடு, அவர்கள் ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட அக்கறை காட்டி, அவர்களோடு உடன் பயணிப்பதற்காக உங்களுக்கு நன்றி.

வெளியில் சென்று, விளிம்பில் வாழ்வோரைச் சந்திக்க அஞ்சவேண்டாம். அங்கு நீங்கள் இயேசுவைச் சந்திப்பீர்கள். தேவையில் இருப்போர் நடுவே, அவர் உங்களுக்காகக் காத்திருக்கிறார்.

உங்கள் அனைவரிடமும் நான் கேட்பது இதுதான். உங்கள் அச்சங்களையும், கடந்தகால காயங்களையும் வெற்றிகொண்டு, புதிய நம்பிக்கையுடன் அடுத்தவரைச் சந்திக்கச் செல்லுங்கள். உங்கள் அனைவருக்கும் திருஅவை முழுவதிலுமிருந்து, அரவணைப்பையும், ஆசீரையும் வழங்குகிறேன்.

14 September 2021, 14:56