தேடுதல்

சிறார் பாதுகாப்பு  குழுவினரைச் சந்தித்தபோது திருத்தந்தை பிரான்சிஸ் சிறார் பாதுகாப்பு குழுவினரைச் சந்தித்தபோது திருத்தந்தை பிரான்சிஸ்  

சிறார் பாதுகாப்பு குறித்த கூட்டத்திற்கு திருத்தந்தை செய்தி

திருஅவையின் நற்பெயரைக் காப்பது என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு, அதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்களின் நலனைப் புறக்கணியாமல் இருப்பதில் கவனமாய்ச் செயல்படுங்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“கடவுளின் பிள்ளைகளைப் பாதுகாப்பதில் நம் பொதுவான பணி” என்ற தலைப்பில், போலந்து நாட்டின் வார்சா நகரில், மத்திய, மற்றும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த, ஏறத்தாழ, இருபது ஆயர் பேரவைகள், செப்டம்பர் 18, இச்சனிக்கிழமையன்று துவங்கியிருக்கும் 3 நாள் கூட்டத்திற்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் உறுப்பினர்கள் சிலரது பாலியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்குச் செவிசாய்க்குமாறு ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை, திருஅவையின் நற்பெயரைக் காப்பது என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு, அதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்களின் நலனைப் புறக்கணியாமல் இருப்பதில் கவனமாய்ச் செயல்படுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் நடைபெறும் முக்கியமான கலந்துரையாடல்கள், மத்திய மற்றும், கிழக்கு ஐரோப்பியத் திருஅவையின் வருங்காலத்தை மட்டுமல்லாமல், கிறிஸ்தவர்களுக்கும் உண்மையிலேயே முக்கியமானது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

நம் தவறுகளையும், குறைகளையும் ஏற்பது, உண்மையிலேயே நம்மை வலுவற்றகளாக உணரச்செய்கின்றது, அதேநேரம், அந்நிலை, அருள்நிறைந்த தருணமாகவும், தன்னையே வெறுமையாக்கும் நேரமாகவும், அன்பு மற்றும், ஒருவர் ஒருவருக்கு ஆற்றும் பணிகளுக்கு புதிய எல்லைகளைத் திறப்பதாகவும் உள்ளது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

நாம் நம் தவறுகளை ஏற்றால், எதற்கும் அஞ்சத் தேவையில்லை, ஏனெனில் ஆண்டவரே நம்மை வழிநடத்துகிறார் எனவும், பாலியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நம் தோழர்கள், மற்றும், நம் பொதுவான வருங்காலத்தை உருவாக்குபவர்கள் என்று கருதி, அவர்களுக்குப் பணியாற்றுவதில், ஆண்டவரின் தாழ்மையான கருவிகளாகச் செயல்படுங்கள் என்றும், அக்கூட்டத்தினரைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் உறுப்பினர்கள் சிலரால் பாலியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட சிறாருக்கு மறுவாழ்வு அளிப்பது, திருஅவை எதிர்கொள்ளும் இந்த கடுமையான பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகளை ஆராய்வது போன்றவற்றில் திருஅவை ஈடுபட்டுள்ளது என்று, அச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, 2019ம் ஆண்டில் உரோம் நகரில் கூடிய உலகின் ஆயர் பேரவைகளின் தலைவர்களிடம் தான் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார்.

சிறாரைப் பாதுகாக்கும் பாப்பிறை அமைப்பும், மத்திய மற்றும், கிழக்கு ஐரோப்பிய ஆயர் பேரவைகளும் இணைந்து நடத்தும் இக்கூட்டம், செப்டம்பர் 22, வருகிற புதனன்று நிறைவடையும். இக்கூட்டத்தில், சிறாரைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆயர்கள், துறவுசபைகளின் தலைவர்கள், பொதுநிலையினர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இவர்கள், போலந்து, அல்பேனியா, குரோவேஷியா, சுலோவேனியா, ஹங்கேரி, சுலோவாக்கியா, ரொமானியா, பல்கேரியா, மோல்டோவா, செக் குசடியரசு, உக்ரைன், இரஷ்யா, எஸ்டோனியா, லாத்வியா, லித்துவேனியா, பெலாரூஸ், செர்பியா, மொந்தெநெக்ரோ, வட மாசிடோனியா, மற்றும் கொசோவோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலத்தீன், மற்றும், கிரேக்க வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகளைச் சேர்ந்தவர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2021, 15:01