தேடுதல்

உரோம் நகரின் ஒரு குடும்பத்துடன் திருத்தந்தை உரோம் நகரின் ஒரு குடும்பத்துடன் திருத்தந்தை 

உடன்பிறந்த நிலை தரும் அன்பு, நம் மகிழ்வை பன்மடங்காக்கும்

செபத்தில் ஒன்றித்திருக்கும் குடும்பங்களும், உதவித் தேவைப்படுவோருக்கு பிறரன்புடன் பணியாற்றும் குடும்பங்களும், மகிழ்வு நிரம்பியவைகளாக இருக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

குடும்பங்களுக்காக குடும்பங்கள் என்ற நோக்கத்துடன் இத்தாலியில் சிறப்பிக்கப்படும் 14வது தேசிய திருப்பயண இறைவேண்டல் நாளை முன்னிட்டு, அதற்கு ஏற்பாடு செய்திருந்த அனைத்துத் தரப்பினருக்கும், தன் வாழ்த்துக்களுடன் கூடிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் 19 மாவட்டங்களில் உள்ள 20 மரியன்னை திருத்தலங்களிலும், சுவிட்சர்லாந்தின் சில மரியன்னை திருத்தலங்களிலும் செபிப்பதற்கென கூடியுள்ள திருப்பயணிகளுக்காக திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில், பல்வேறு துயர்களாலும், சிரமங்களாலும், புதிய ஏழ்மை நிலைகளாலும் மனித குலம் சுமைகளைத் தாங்கிவரும் வேளையில், இயேசு கிறிஸ்துவில் நம் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒன்றாக இந்த ஒன்றுகூடல் உள்ளது என கூறியுள்ளார்.

'ஒன்றித்திருப்பதில் மகிழ்வு' என்ற தலைப்புடன் இடம்பெறும் இந்த திருப்பயணம், உலகாயுதப் போக்குகளிலும், சுயநலப் போக்குகளிலும் மகிழ்வைத் தேடாமல், ஒருவருக்கொருவர் ஆதரவுடன் ஒன்றித்திருப்பதிலும், பெறுவதைவிடக் கொடுப்பதிலும், மகிழ்வைத் தேடவேண்டும் என்பதை, இந்த மரியன்னை திருத்தல செப திருப்பயணம் நினைவூட்டி நிற்கின்றது என, தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

உடன்பிறந்த நிலை தரும் அன்பு என்பது, நம் மகிழ்வுக்குரிய சக்தியை பன்மடங்காக்குகிறது, ஏனெனில், இது மற்றவர்களில் காணப்படும் நன்மைத்தனங்கள் குறித்து மகிழ்ச்சியடையச் செய்கின்றது, என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபத்தில் ஒன்றித்திருக்கும் குடும்பங்களும், இறைவார்த்தையை தன்னில் கண்டுகொள்ளும் குடும்பங்களும், வாழ்வுக்கு தன்னையே திறந்ததாகச் செயல்பட்டு, உதவித் தேவைப்படுவோருக்கு பிறரன்புடன் பணியாற்றும் குடும்பங்களும், பலம் பொருந்தியதாகவும், மகிழ்வு நிரம்பியவைகளாகவும் இருக்கும் என மேலும் கூறியுள்ளார்.

2022ம் ஆண்டு ஜூன் மாதம் 22 முதல் 26 வரை உரோம் நகரில் இடம்பெறவிருக்கும் பத்தாவது உலக குடும்ப கருத்தரங்கை நோக்கிய நம் திருப்பயணத்தில், அனைவரும் ஒன்றிணைந்து செபத்துடன் தயாரிப்பைத் துவக்குவோம் என கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்ப கருத்தரங்கிற்காக தயாரிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செபத்தையும் தன் செய்தியில் தந்துள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2021, 13:53