திருத்தந்தையைச் சந்தித்த சிலே நாட்டு குடியரசுத் தலைவர்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
சிலே நாட்டு குடியரசுத் தலைவர் Sebastián Piñera Echenique அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, செப்டம்பர் 9, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களை செப்டம்பர் 6,7 ஆகிய இருநாள்கள் சந்தித்தபின், செப்டம்பர் 8, இப்புதனன்று, இத்தாலிய அரசுத்தலைவரையும் சந்தித்த சிலே நாட்டு அரசுத்தலைவர் Piñera அவர்கள், இவ்வியாழன் காலையில் வத்திக்கானில் திருத்தந்தையைச் சந்தித்தார்.
சிலே நாட்டு குடியரசின், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவுடன் திருப்பீடம் சென்ற அரசுத்தலைவர் Piñera அவர்கள், திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசியபின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
சிலே குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டின் கல்வி மற்றும், நலவாழ்வுத் துறைகளில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் ஆகியவை குறித்து, இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.
சிலே குடியரசுத் தலைவருடன் நிகழ்ந்த இச்சந்திப்பைத் தொடர்ந்து, விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் பிரான்சிஸ்க்கோ இலதாரியா அவர்களை இவ்வியாழனன்று காலை, திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4 முடிய திருஅவையில் சிறப்பிக்கப்படும் படைப்பின் காலத்தையொட்டி, அண்மைய நாள்களில் தன் டுவிட்டர் செய்திகளை பதிவு செய்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 9, இவ்வியாழனன்று, படைப்பின் மீது நாம் காட்டவேண்டிய மதிப்பை மையப்படுத்தி, மற்றுமொரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
"நம் பொதுவான இல்லமும், படைப்பும் நமது பயன்பாட்டுக்கென வழங்கப்பட்டுள்ள 'வளம்' மட்டுமல்ல. படைக்கப்பட்ட ஒவ்வோர் உயிரும் தன்னிலேயே மதிப்புள்ளது. அது ஒவ்வொன்றும் இறைவனின் அளவற்ற ஞானத்தையும், நன்மைத்தனத்தையும் பிரதிபலிக்கின்றது" என்ற சொற்களை, "படைப்பின் காலம்" என்ற 'ஹாஷ்டாக்'குடன் ஒரு டுவிட்டர் செய்தியாக திருத்தந்தை வெளியிட்டிருந்தார்.