தேடுதல்

மறைக்கல்வியுரை: கிறிஸ்துவில் ஏற்புடையவர் ஆதலில் அகமகிழுங்கள்

கிறிஸ்தவர்கள் அனைவரும், தங்களின் கிறிஸ்தவ நம்பிக்கையை, வாழும்முறை பற்றி, சிந்தித்துப் பார்க்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

கலாத்திய மாநிலம், தற்போதைய துருக்கி நாட்டில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள திருஅவைகளுக்கு, புனித பவுல், கி.பி. 52-53ம் ஆண்டுகளில் எழுதியதாகச் சொல்லப்படும் திருமடலை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த சில வாரங்களாக, தன் புதன் மறைக்கல்வியுரைகளை வழங்கி வருகிறார். கலாத்தியப் பகுதியின் முதல் கிறிஸ்தவர்கள், நற்செய்தியைப் பெற்றுக்கொண்டபின்னர், அவர்கள் தொடங்கிய வாழ்வுப் பாதையைவிட்டு விலகுவது எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றி புனித பவுல் கூறியிருப்பதை, கடந்தவார தன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை வழங்கினார். அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 01, இப்புதன் காலையில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த மக்களுக்கு வழங்கிய மறைக்கல்வியுரையில், ஏற்புடையவராய் வாழ்வதில், நாம் அகமகிழவேண்டும்  என்பது பற்றிய புனித பவுலின் கருத்தை விளக்கிக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.   

“அறிவிலிகளான காலத்தியரே, உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய் உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா? உங்களிடம் ஒன்றுமட்டும் கேட்டறிய விரும்புகிறேன்; நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா? அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா? தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனிதமுயற்சியால் நிறைவுசெய்யப் போகிறீர்களா? அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா?” (கலா.3,1-3)

மறைக்கல்வியுரை

இப்புதனன்று, முதலில், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் 3ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி, பல்வேறு மொழிகளில் முதலில் வாசிக்கப்பட்டது. பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார். அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, கிறிஸ்துவில் நம் வாழ்வு புதியதாய் அமையவேண்டும் என, புனித பவுல் எவ்வாறு வலியுறுத்தியுள்ளதை, மறைக்கல்வியுரைகளில் நாம் சிந்தித்து வருகிறோம். அத்தகைய வாழ்வு, கட்டளைகளை, நுணுக்கமாய்ப் பின்பற்றுவதை மட்டும் அடிப்படையாகக்கொண்ட சமய உணர்விலிருந்து கிறிஸ்தவர்களை விடுதலையாக்குகிறது. கிறிஸ்துவின் மரணம், மற்றும் உயிர்ப்பின் நற்செய்தியில்  கலாத்தியர்கள் கொண்டிருந்த நம்பிக்கை, மற்றும், அவர்கள் மத்தியில் தூய ஆவியார் அபரிவிதமாய்ப் பொழியப்பட்டதில் கிடைத்த அனுபவம் ஆகியவை வழியாக, அவர்கள் பெற்றுக்கொண்ட மீட்பளிக்கும் அருள் பற்றி, புனித பவுல் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். அதோடு, சிலுவையில் அறையுண்ட இயேசுவில் வைத்த நம்பிக்கையால், அருள், மற்றும், விடுதலையை, தான் அனுபவித்தது பற்றியும் பவுல் அத்திருமடலில் பதிவுசெய்துள்ளார். “இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில், நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்” (கலா.2:20). திருத்தூதர் பவுல், கலாத்தியருக்குக் கூறியதுபோல, நம்மிடமும் இன்று அவர் பேசுகிறார். கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்ட நம்பிக்கை வழியாக, ஏற்புடையவர் ஆதலில் அகமகிழவும், நம் அன்றாட வாழ்வை, கடவுளின் இரக்கமுள்ள அன்பிற்கு, உறுதியுடன் சான்றுபகரவும், அவர் நமக்கு அழைப்பு விடுக்கிறார். இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வில் பங்குகொண்ட அனைவர் மீதும், அவர்களின் குடும்பங்கள் மீதும், கிறிஸ்துவின் மகிழ்வும், அமைதியும் நிரப்பப்பட செபித்து, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

01 September 2021, 12:04