தேடுதல்

Focolare இயக்கத்தின் நண்பர் குழு ஆயர்கள் சந்திப்பு Focolare இயக்கத்தின் நண்பர் குழு ஆயர்கள் சந்திப்பு  

திருத்தந்தை, Focolare இயக்கத்தின் ஆயர் நண்பர்கள் குழு சந்திப்பு

இவ்வுலகில் நல்லிணக்கம் நிலவவேண்டும் என்ற கடவுளின் கனவு நனவாக்கப்படுவதற்கு, Focolare இயக்கத்தின் நண்பர் ஆயர்கள் உதவுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒன்றித்த வாழ்வை ஊக்குவிக்கும் பணியில் வளர்வதற்கு, எப்போதும் திறந்தமனதாயும், எவரையும் புறக்கணியாமலும் இருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 25, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் தன்னைச் சந்திக்க வந்திருந்த ஆயர்கள் குழு ஒன்றிடம் கூறினார்.

“எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக” (யோவா.17:21) என்ற இயேசுவின் இறைவேண்டலால் உந்தப்பட்டு, ஒருமைப்பாடு மற்றும், உலகளாவிய உடன்பிறந்த உணர்வை வளர்க்கும் நோக்கத்தில் செயல்பட்டுவரும், பன்னாட்டு Focolare கத்தோலிக்க இயக்கத்தின் ஆயர் நண்பர்கள் குழுவின் 15 பேரை, வத்திக்கானின் திருத்தந்தையர் அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இச்சந்திப்பில் கலந்துகொள்ள இயலாமல் தொலைதூரத்தில் இருக்கும் ஆயர்களுக்கும் தன் நல்வாழ்த்தைத் தெரிவித்தார்.

நோயின் காரணமாக இச்சந்திப்பில் கலந்துகொள்ள இயலாமல் இருக்கின்ற, தாய்லாந்து நாட்டு கர்தினால் Francis Xavier Kovithavanij அவர்கள் விரைவில் நற்குணம் அடைவதற்கு இறைவனை மன்றாடுவோம் என்று ஆயர் குழுவிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இயக்கத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள நட்புறவுப் பாதை பற்றிய சிந்தனைகளை வழங்கவிரும்புவதாகக் கூறினார்.

மரியாவின் பணி அல்லது Focolare இயக்கம் என அழைக்கப்படும், இந்த இயக்கத்தைத் தோற்றுவித்த Chiara Lubich அவர்களின் தனிவரத்தைப் பின்பற்றி, இவ்வியக்கத்தின் உறுப்பினர்கள், திருஅவையில் ஒன்றிப்பு, அனைத்து நம்பிக்கையாளரிடையே ஒன்றிப்பு, உலகளவில் ஒன்றிப்பு என, ஒன்றிப்புக்காகப் பணியாற்றி வருவதைப் பாராட்டிப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர்களாகிய நாம், இறைமக்களுக்குப் பணியாற்றுவதற்காக நம்மை அர்ப்பணித்துள்ளோம் என்றும், அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக என்ற, ஆண்டவர் இயேசுவின் விருப்பத்தை, தூய ஆவியாரே நம் இதயத்தில் பதிக்கிறார் என்றும், தன் உரையில் கூறியத் திருத்தந்தை, ஆயர்களாகிய நாம், நம் பணிகளில் வெளிப்புறத்தில் மட்டுமல்லாமல், கிறிஸ்துவின் உயிருள்ள உடலாகிய திருஅவையிலும் ஒன்றித்திருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

இதுவே கடவுளின் கனவு என்று சொல்லலாம், கிறிஸ்துவில், எல்லாவற்றிலும், எல்லாரோடும் ஒப்புரவாகி, நல்லிணக்கத்தோடு வாழ்வதே கடவுளின் திட்டம் என்றுரைத்த திருத்தந்தை, ஒன்றிப்புக்குத் துணிச்சலோடு சான்றுபகர்ந்த புனிதர்களைப் பின்பற்றி நடப்போம் என்றும் கூறினார்.

44 நாடுகளிலிருந்து, 70 திருஅவைகள், மற்றும், திருஅவை குழுமங்களைச் சேர்ந்த,  ஏறத்தாழ 170 ஆயர்கள், காஸ்தெல்கந்தோல்ஃபோவின் Focolare Mariapolis பன்னாட்டு மையத்தில், செப்டம்பர் 24, இவ்வெள்ளி, 25 இச்சனி ஆகிய இரு நாள்களில், “பிரிவினைகள் நிறைந்த உலகில் ஒன்றித்திருக்கத் துணிவு” என்ற தலைப்பில் கூட்டம் ஒன்றை நடத்தினர்.  

1943ம் ஆண்டில் வட இத்தாலியின் Trent நகரில் Chiara Lubich என்பவரால் துவக்கப்பட்ட Focolare இயக்கம், 1962ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருஅவையின் ஒப்புதலைப் பெற்றது. இவ்வியக்கம், தற்போது 182 நாடுகளில் ஏறத்தாழ இருபது இலட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கின்றது. யூதர்கள், முஸ்லிம்கள், புத்த மதத்தினர், இந்துக்கள், சீக்கியர்கள் உட்பட பல்வேறு மதத்தினரும், 350, கிறிஸ்தவ மற்றும், திருஅவைக் குழுமங்களும் இதில் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2021, 14:45