தேடுதல்

Laudato Si' இயக்கத்தினரால் திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட ஆபிரகாமின் கூடாரம் Laudato Si' இயக்கத்தினரால் திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட ஆபிரகாமின் கூடாரம் 

Laudato Si' இயக்கத்தினர் உருவாக்கிய 'ஆபிரகாமின் கூடாரம்'

இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் படைப்பின் காலத்திற்கென, Laudato Si' இயக்கத்தினர் உருவாக்கியிருந்த 'ஆபிரகாமின் கூடாரம்' என்ற அடையாளத்தை, திருத்தந்தைக்கு பரிசாக வழங்கினர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலியில் செயலாற்றிவரும் Laudato Si' இயக்கத்தின் 100 பிரதிநிதிகள், செப்டம்பர் 1, இப்புதனன்று, படைப்பைப் பாதுகாக்கும் உலக இறைவேண்டல் நாள் கடைப்பிடிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்னர், அவரைச் சந்தித்தனர்.

"இவ்வுலகம், அனைவருக்கும் உரிய இல்லமா? கடவுளின் இல்லத்தை மீண்டும் புதுப்பிக்க" என்ற மையக்கருத்துடன், இவ்வாண்டு, செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 4 முடிய சிறப்பிக்கப்படும் படைப்பின் காலத்திற்கென, Laudato Si' இயக்கத்தினர் உருவாக்கியிருந்த 'ஆபிரகாமின் கூடாரம்' என்ற அடையாளத்தை, திருத்தந்தைக்கு பரிசாக வழங்கினர்.

தன் கூடாரத்திற்கு முன் வந்து நின்ற மூன்று விருந்தினரை, ஆபிரகாம் வரவேற்று, அவர்களுக்கு விருந்தளித்ததை நினைவுறுத்தும்வண்ணம் உருவாக்கப்பட்ட இந்தக் கூடாரம், இவ்வுலகம், அனைவரையும் வரவேற்கும் ஓர் இல்லமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது என்று, இவ்வியக்கத்தினர் விளக்கமளித்துள்ளனர்.

படைப்பின் காலத்தைச் சிறப்பிக்கும், Laudato Si' இயக்கத்தினர்
படைப்பின் காலத்தைச் சிறப்பிக்கும், Laudato Si' இயக்கத்தினர்

ஆல்பேனியா நாட்டில் நிலவிய கடுமையான சூழல்களால், 15ம் நூற்றாண்டு அங்கிருந்து புறப்பட்டு, இத்தாலியின் Cosenza என்ற பகுதியில் Civita என்ற நகரை உருவாக்கிய புலம்பெயர்ந்தோர், தற்போது, உலகின் பல பகுதிகளிலிருந்து இத்தாலியில் புகலிடம் தேடிவரும் புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

Civita நகரில், Laudato Si' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் Daniela Manna அவர்களும், இவ்வியக்கத்தின் ஏனைய உறுப்பினர்களும், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களின் உதவியுடன் 'ஆபிரகாமின் கூடாரத்தை'ச் செய்ததாகக் கூறினர்.

செப்டம்பர் 1, இப்புதனன்று துவங்கியுள்ள படைப்பின் காலத்தைப்பற்றிய விழிப்புணர்வை உருவாக்கிவரும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை, Laudato Si' இயக்கம், கிறிஸ்தவ சபைகளின் உலக அவை அனைத்தோடும் இணைந்து, படைப்பின் காலத்தை தகுந்த முறையில் கடைபிடிப்போம் என்று, திருத்தந்தை, தன் மூவேளை செப உரையின் இறுதியில், அழைப்பு விடுத்தார்.

02 September 2021, 14:19