தேடுதல்

 "Francesco" ஆவணப்படம் பார்த்த புலம்பெயர்ந்தோர், வீடற்றோருடன் திருத்தந்தை "Francesco" ஆவணப்படம் பார்த்த புலம்பெயர்ந்தோர், வீடற்றோருடன் திருத்தந்தை  

புலம்பெயர்ந்தோர், வீடற்றோருடன் திருத்தந்தை அருகாமை

வத்திக்கானின் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கின் ஒரு பகுதியில், “பிரான்செஸ்கோ” என்ற ஆவணப்படம் ஒன்றை, பார்த்துக்கொண்டிருந்த ஏறத்தாழ நூறு, புலம்பெயர்ந்தோர் மற்றும், வீடற்றோரைச் சந்தித்து ஆறுதலளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 06, இத்திங்கள் மாலையில்,  வத்திக்கானின் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கின் ஒரு பகுதியில், “பிரான்செஸ்கோ” என்ற ஆவணப்படம் ஒன்றை, பார்த்துக்கொண்டிருந்த ஏறத்தாழ நூறு, புலம்பெயர்ந்தோர் மற்றும், வீடற்றோரைச் சந்தித்து, அவர்களை வியப்பில் ஆழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த ஆவணப்படம் முடியும் நேரத்தில், அந்த இடத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்த அனைவருக்கும், குறிப்பாக, அண்மை வாரங்களில், ஆப்கானிஸ்தானிலிருந்து உரோம் வந்துள்ள இருபது பேருக்கும், தனது பாசத்தையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

திருத்தந்தையின் இச்சந்திப்பு பற்றி அறிக்கை வெளியிட்ட, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், உரோம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் உதவியால் ஆப்கானிஸ்தானிலிருந்து உரோம் வந்திருக்கும் இந்த இருபது பேரும், 14 வயதுக்கும், 20 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று கூறியுள்ளார்.

இந்த புலம்பெயர்ந்தோர், தங்களின் பெற்றோரை ஈரான் புலம்பெயர்ந்தோர் முகாமில் விட்டுவிட்டு, பல ஆண்டுகளுக்குமுன் உரோம் வந்திருக்கும் அவர்களது உறவினர் ஒருவரின் பாதுகாவலில் இப்போது உள்ளனர் என்றும், மத்தேயோ புரூனி அவர்கள் கூறியுள்ளார்.

“பிரான்செஸ்கோ” என்ற ஆவணப்படத்தைத் தயாரித்த, Evgeny Afineevsky அவர்களும், Laudato Si’ அமைப்பும், இணைந்து அப்படத்தை, வறியோருக்குத் திரையிட்டனர். இப்படத்தைத் திரையிடுவதற்குமுன் உரையாற்றிய Evgeny Afineevsky அவர்கள், இரஷ்யாவைப் பூர்வீகமாகக் கொண்டிருந்த தனது குடும்பம், முதலில் இஸ்ரேலுக்குப் புலம்பெயர்ந்து, பின்னர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியது என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2021, 15:20