தேடுதல்

 சுலோவாக்கியா கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையினருக்கு திருத்தந்தை உரை சுலோவாக்கியா கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையினருக்கு திருத்தந்தை உரை 

சுலோவாக்கியா கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையினருக்கு உரை

திருத்தந்தை பிரான்சிஸ் - சுலோவாக்கியா மக்களுக்கே உரிய விருந்தோம்பல், சமாதானமாக வாழ்தல், கூட்டுறவு ஆகிய நற்பண்புகள், நற்செய்தி பரவுவதற்கு மிகவும் தேவையான அம்சங்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 12, இஞ்ஞாயிறு மாலையில், சுலோவாக்கியா நாட்டு திருஅவைகளின் கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரையின் சுருக்கம்:

சுலோவாக்கியா கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் உறுப்பினர்களே, ஒரு திருப்பயணியாக இந்நாட்டில் நான் மேற்கொள்ளும் முதல் சந்திப்பு உங்களுடன் நிகழ்வதைக் கண்டு மகிழ்கிறேன். இந்நாட்டில் கிறிஸ்தவ ஒன்றிப்பு தழைத்து வளரவேண்டும் என்பதற்கு இது ஓர் அழகிய அடையாளம்.

இந்நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சமுதாயங்களும், பல ஆண்டுகள், கடவுள் மறுப்பு என்ற பெரும் இன்னலுக்கு உள்ளாகி, பின்னர், சுதந்திரத்தை மீண்டும் புதிதாகப் பெற்றன. தற்போது, சுதந்திரத்துடன், நம் மத நம்பிக்கையை வாழ்வது கடினம் என்பதை, நீங்கள் அனைவரும் உணர்ந்துவருகிறீர்கள். இப்போது, நமது சுதந்திரம், வெளியிலிருந்து தடுக்கப்படவில்லை, மாறாக, உள்ளிருந்து தடுக்கப்படுகிறது.

இதையே, Grand Inquisitor என்ற கவிதையில் Dostoevsky அவர்கள் கூறியுள்ளார். இவ்வுலகிற்கு மீண்டும் வரும் இயேசு, மீண்டும் கைதுசெய்யப்படுகிறார். மனித சுதந்திரத்தைப்பற்றி இயேசு மிகக்கூடுதலாக மதிப்பிட்டுவிட்டார் என்று, அவர்மீது குற்றம் சுமத்துபவர் சாடுகிறார். அவர், இயேசுவிடம் சொல்வது இதுதான்: "நீ வெறுங்கையுடன் இந்த உலகத்திற்குச் சென்று மக்களுக்கு விடுதலையை வாக்களிக்கிறாய். அவர்களோ, தங்கள் உள்ளார்ந்த முரண்பாடுகளுடன், அத்தகைய சுதந்திரத்தை கற்பனையிலும் எண்ணிப்பார்க்க இயலாமல் அஞ்சி நடுங்குகின்றனர். மனிதர்கள் சுதந்திரமாய் இருப்பதைக்காட்டிலும் சகித்துக்கொள்ள முடியாத வேறெதுவும் இல்லை" (The Brothers Karamazov, Part II, Book V, Ch. 5). தங்களுக்கு ரொட்டியும், பாதுகாப்பும் கிடைக்கும்வண்ணம் முடிவெடுக்கக்கூடிய ஒருவரிடம் தங்கள் சுதந்திரத்தை அடகுவைக்க மக்கள் தயாராக உள்ளனர் என்று இயேசுவிடம் சொல்லும் இம்மனிதர், மக்களின் மனங்களை அடக்கி, ஒடுக்கி, அமைதியை நிலைநாட்டக்கூடிய சீசரைப்போல் இயேசு மாறாததற்காக, அவர்மீது குற்றம் சுமத்துகிறார். ரொட்டியைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்று, மனிதகுலம் குரல் எழுப்பிய வேளையில், இயேசு, அவர்களுக்கு, சுதந்திரம் வழங்குவதையே தொடர்ந்து செய்தார்.

அன்பு சகோதரர்களே, இது நமக்கு நிகழாமல் இருப்பதாக! ரொட்டி போதும் என்ற பொறிக்குள் நாம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க ஒருவர் ஒருவருக்கு உதவி செய்வோமாக. ஐரோப்பாவின் இதயம்போல் அமைந்திருக்கும் இவ்விடத்தில், நாம் நம்மிடையே எழுப்பும் கேள்வி: கிறிஸ்தவர்களாகிய நாம் நற்செய்தியை பறைசாற்றவும், இறைவாக்கினருக்குரிய சாட்சியம் வழங்கவும் ஆர்வத்தை இழந்துவிட்டோமா? ரொட்டியும், பாதுகாப்பும் கிடைத்துவிட்ட திருப்தியில், நம்மிடையே ஒன்றிப்பை உருவாக்கும் வேகத்தை நாம் இழந்துவிட்டோமா? நம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இலாபம் தரும் விடயங்கள் பற்றிமட்டும் கவலைப்படாமல், அனைவரும் விடுதலை அடைவதை உறுதி செய்வோம்.

இந்த நாடுகளில், சிரில் மற்றும் மெத்தோடியுஸ் என்ற புனித சகோதரர்கள், உடன்பிறந்த நிலையுடன் கூடிய நற்செய்தியின் பறைசாற்றலை துவக்கிவைத்தனர். கிறிஸ்தவர்களாகிய நம்மிடையே உடன்பிறந்த உணர்வு வளர்வதற்கு இவ்விருவரும் நமக்கு உதவி செய்வார்களாக. ஒவ்வொரு கிறிஸ்தவ சமுதாயமும் அவரவரின் தனிப்பட்ட தேவைகளுக்கு முதலிடம் கொடுத்தால், நாம் எவ்வாறு கிறிஸ்தவ ஒன்றிப்பில் வளரமுடியும்? நம் தனிப்பட்ட தேவைகளும், அரசியல் பிணைப்புக்களும், நாம் ஒன்றிணைந்து வருவதற்கு தடைகளாக  இருக்கக்கூடாது. அதற்கு, புனிதர்களான சிரில் மற்றும் மெத்தோடியுஸ் உதவி செய்வார்களாக.

சுதந்திரம், ஒற்றுமை ஆகியவற்றின் நற்செய்தியைப் பறைசாற்ற, உங்கள் சகோதரன் என்ற முறையில் இரு ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். முதல் ஆலோசனை, ஆழ்நிலை தியானம். ஸ்லாவிக் நாடுகளுக்குரிய ஆழ்நிலை தியான உணர்வு என்ற ஆன்மீக பாரம்பரியத்தை ஒருவர் ஒருவருக்குச் சொல்லித்தாருங்கள். ஐரோப்பாவிற்கு இது அதிகம் தேவைப்படுகிறது.

இரண்டாவது  ஆலோசனை, செயல்பாடு. கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்க, நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தால் மட்டும் போதாது, அது, ஆண்டவருக்கு அருகே நம்மைக் கொண்டுசெல்வோருக்காக, ஏதாவது செய்வதன் வழியே வெளிப்படவேண்டும். ஆண்டவருக்கு அருகே நம்மைக் கொண்டுசெல்பவர்கள் யார்? அவர்கள் ஏழைகள், ஏனெனில் அவர்களில் இயேசு பிரசன்னமாகியிருக்கிறார் (காண்க. மத். 25:40). பிறரன்பு பணிகளை நாம் பகிர்ந்துகொள்ளும்போது, அது, நம்மிடையே நிலவும் முற்சார்பு எண்ணங்களையும், கருத்து வேறுபாடுகளையும் வெற்றிகொள்வதற்கு உதவியாக இருக்கும்.

நாம் ஒரே மேசையில் திருப்பலி விருந்தை பகிர்ந்துகொள்ள தற்போது இயலவில்லை என்றாலும், வறியோருக்கு பணியாற்றுவதன் வழியே நம் மேசைகளுக்கு இயேசுவை வரவேற்கமுடியும். இதன் வழியே, இவ்வுலகம், நம்மிடையே உள்ள ஒன்றிப்பை உணரவும், புரிந்துகொள்ளவும் முடியும். குறிப்பாக, நாம் வாழும் இந்த நெருக்கடி காலத்தில், வலுவற்றோருக்கு துணையாக இருந்தால்மட்டுமே நாம் இந்த பெருந்தொற்றினை வெல்லமுடியும்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, ஒருங்கிணைந்து நீங்கள் மேற்கொண்டுள்ள பயணத்திற்காக நான் நன்றி கூறுகிறேன். சுலோவாக்கியா மக்களுக்கே உரிய விருந்தோம்பல், சமாதானமாக வாழ்தல், கூட்டுறவு ஆகிய நற்பண்புகள், நற்செய்தி பரவுவதற்கு மிகவும் தேவையான அம்சங்கள். கிறிஸ்தவ ஒன்றிப்பில் நீங்கள் மேற்கொண்டுள்ள பயணத்தை தொடரும்படி உங்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்காக நான் செபிக்கிறேன், எனக்காக செபிக்க மறவாதீர்கள். நன்றி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2021, 13:39