தேடுதல்

ஹங்கேரி நாட்டு உதவிப் பிரதமர் Zsolt Semjén ஹங்கேரி நாட்டு உதவிப் பிரதமர் Zsolt Semjén  

பூடபெஸ்ட்டில் திருத்தந்தை பிரான்சிஸ்

பூடபெஸ்ட் நகரின் தியாகிகள் வளாகம் அந்நாடு அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்ததன் ஆயிரமாம் ஆண்டு நினைவாக, 1896ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மணி, 45 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து பூடபெஸ்ட் நகரை இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் சரியாக காலை 7 மணி 42 நிமிடங்களுக்குச் சென்றடைந்தார். வழியில் தான் கடந்துசென்ற இத்தாலியா, குரோவேஷியா ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு, தன் நல்வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்து, தந்திச் செய்திகளையும் திருத்தந்தை அனுப்பினார். விமானத்தளத்தில், ஹங்கேரி நாட்டுத் திருப்பீடத் தூதர் பேராயர் Michael Blume, அந்நாட்டு உதவிப் பிரதமர் Zsolt Semjén உட்பட சில பிரமுகர்கள், திருத்தந்தையை வரவேற்றனர். இரு சிறார், மரபு உடைகளில் திருத்தந்தைக்கு மலர்கள் அளித்து வாழ்த்தி வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து 22.6 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, பூடபெஸ்ட் நகரின் தியாகிகள் வளாகம் சென்றார். அந்நாடு அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்ததன் ஆயிரமாம் ஆண்டு நினைவாக, 1896ம் ஆண்டில், இந்த வளாகம் அமைக்கப்பட்டது. அந்நகரிலுள்ள இந்த பெரிய வளாகத்தில் அந்நாட்டின் Magyar இனத்தின் ஏழு தலைவர்கள், மற்றும், நாட்டின் முக்கிய தேசியத் தலைவர்கள் ஆகியோரின் சிலைகளும், பெயர் தெரியாத படைவீரரின் கல்லறை என்ற பெயரில், தியாகிகளின் பெரிய நினைவுக்கல்லும் உள்ளன. அந்த வளாகத்தில் அந்நாட்டின் பல முக்கிய அரசியல் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இங்கு நுண்  கலைகள் அருங்காட்சியகமும், கலைகள் மாளிகையும் உள்ளன. இந்த அருங்காட்சியகம், 1900மாம் ஆண்டுக்கும், 1906ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், Albert Schickedanz, Fülöp Herzog ஆகிய இருவரால் கட்டப்பட்டது. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பன்னாட்டு கலைப்பொருள்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இது, 1987ம் ஆண்டில், யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும் இணைக்கப்பட்டது.

அரசுத்தலைவர், பிரதமர் சந்திப்பு

ஹங்கேரி அரசுத் தலைவர் சந்திப்பு
ஹங்கேரி அரசுத் தலைவர் சந்திப்பு

இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 8 மணியளவில், அதாவது இந்திய இலங்கை நேரம் இஞ்ஞாயிறு முற்பகல் 11.30 மணியளவில், பூடபெஸ்ட் தியாகிகள் வளாகத்திலுள்ள நுண்  கலைகள் அருங்காட்சியகத்திற்குச் சென்ற திருத்தந்தையை, ஹங்கேரி நாட்டு அரசுத்தலைவர் János Áder, பிரதமர் Viktor Orbán, உதவிப் பிரதமர் Zsolt Semjén ஆகியோர், வாயிலேயே நின்று வரவேற்றனர். அந்த அருங்காட்சியகத்தின் ரொமானிக்கா என்ற அறையில், இத்தலைவர்களோடு கலந்துரையாடி, அவர்களுக்குப் பரிசுப்பொருள்களையும் திருத்தந்தை வழங்கினார். வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை ஆசீர் வழங்குவதைச் சித்தரிக்கும் வண்ணப்படம் ஒன்றை அரசுத்தலைவருக்குப் பரிசாக வழங்கினார், திருத்தந்தை. இச்சந்திப்பில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களும் கலந்துகொண்டனர். ஹங்கேரியில் திருஅவை ஆற்றிவரும் பணிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணம், குடும்பத்தைப் பாதுகாத்து அதனை வளர்ப்பதில் அக்கறை போன்ற தலைப்புகள் இச்சந்திப்பில் கலந்துபேசப்பட்டன என்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2021, 14:56