தேடுதல்

திருத்தந்தைக்காகக் காத்திருக்கும் மக்கள் திருத்தந்தைக்காகக் காத்திருக்கும் மக்கள் 

பிராத்திஸ்லாவா பெத்லகேம் மையத்தில் திருத்தந்தை

Sastin நகரில், ஏழு துயரங்களின் துயருறும் அன்னை மரியா தேசிய திருத்தலம் அமைந்துள்ளது. அந்த அன்னை மரியாவின் திருநாள் செப்டம்பர் 15, வருகிற இப்புதனன்று சிறப்பிக்கப்படுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

செப்டம்பர் 13, இத்திங்கள் மாலை 3. 45 மணிக்கு, திருப்பீடத் தூதரகத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பெத்லகேம் என்ற மையத்திற்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்த மையத்தில், புனித அன்னை தெரேசா சபையினர், கடந்த இருபது ஆண்டுகளாக, நோயாளிகள் மற்றும், தேவையில் இருப்போருக்கு உதவி வருகின்றனர். இம்மையத்தில் சிறிதுநேரம் செலவிட்ட திருத்தந்தை, அன்னை மரியா படம் ஒன்றைப் பரிசாக அளித்து, எல்லாரையும் ஆசீர்வதித்தார். அதன்பின்னர், பெத்லகேம் மையத்திலிருந்து, Rybne namestie என்ற வளாகத்திற்குச் சென்றார் திருத்தந்தை. புனித மார்ட்டீன் பேராலயத்திற்கு அருகிலுள்ள இவ்விடத்தில், 1893ம் ஆண்டில் யூதமதத் தொழுகைக்கூடம் ஒன்று கட்டப்பட்டது. அது கம்யூனிச அரசால், 1969ம் ஆண்டில் தகர்க்கப்பட்டது. இந்த வளாகத்தில் இரண்டாம் உலகப் போரில் யூதர்கள் அழிக்கப்பட்டதன் நினைவுச் சின்னம் ஒன்றும் உள்ளது. பிராத்திஸ்லாவாவில், 1871ம் ஆண்டில் யூதக்குழுமம் வாழத் தொடங்கியது.

பிராத்திஸ்லாவாவில் எபிரேயர்

1940ம் ஆண்டில் 15 ஆயிரம் யூதர்கள் இந்நகரில் வாழ்ந்தனர். ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப்பின் அவ்வெண்ணிக்கை 3,500 ஆகக் குறைந்தது. 1989ம் ஆண்டில், சுலோவாக்கியாவில் கம்யூனிசம் வீழ்ச்சியுற்றபின், பிராத்திஸ்லாவாவில் மீண்டும் யூத சமுதாயம் வளரத் தொடங்கியுள்ளது. இம்மக்களை Rybne namestie வளாகத்தில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். பிராத்திஸ்லாவாவில் யூத சமுதாயத்தைச் சந்தித்தபின்னர், திருப்பீட தூதரகம் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு, சுலோவாக்கியா நாட்டுப் பாராளுமன்றத் தலைவர் Boris Kollar அவர்களையும், பிரதமர் Eduard Heger அவர்களையும் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடுவது, திருத்தந்தையின் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளின் இறுதி நிகழ்வுகளாகும். செப்டம்பர் 14, இச்செவ்வாயன்று, Kosice, presov ஆகிய நகரங்களிலும், செப்டம்பர் 15, புதனன்று Sastin நகரிலும் பயண நிகழ்வுகளை முடித்து, வத்திக்கான் திரும்புவார் திருத்தந்தை பிரான்சிஸ். Sastin நகரில், ஏழு துயரங்களின் துயருறும் அன்னை மரியா தேசிய திருத்தலம் அமைந்துள்ளது. அந்த அன்னை மரியாவின் திருநாள் செப்டம்பர் 15, வருகிற இப்புதனன்று சிறப்பிக்கப்படுகிறது. இந்த 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 54 நாடுகளில், தன் திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2021, 15:06