தேடுதல்

ஐரோப்பிய ஆயர்களோடு இணைந்து புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி ஐரோப்பிய ஆயர்களோடு இணைந்து புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி 

திருத்தந்தை: மனித இதயத்தை திருப்திப்படுத்துவது அன்பு மட்டுமே

மற்றவரோடு ஒன்றிணைந்து மீள்கட்டமைப்புப் பணியை மேற்கொண்டால், எல்லாச் சூழல்களிலும் ஒன்றிப்பைக் கட்டியெழுப்பும் கைவினைஞர்களாக நாம் மாறுவோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மதத்திலிருந்து விலகி வாழும் ஒரு போக்கு, மற்றும், நம்பிக்கைக் குறைவு ஆகியவை, ஐரோப்பாவில் வளர்ந்துவருவதைப்பற்றி மட்டும் கவலைப்படாமல், இயேசுவைச் சந்திப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஐரோப்பிய ஆயர்களைக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். 

CCEE எனப்படும், ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை சிறப்பிக்கும் விதமாக, உரோம் நகரில் நான்கு நாள் கூட்டம் ஒன்றைத் துவக்கியிருக்கும் 39 ஐரோப்பிய ஆயர்களோடு இணைந்து, செப்டம்பர் 23, இவ்வியாழன் மாலையில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள்” (1:5,7) என்ற இறைவாக்கினர் ஆகாய் அவர்களின் சொற்களை மையப்படுத்தி, இத்திருப்பலியில் மறையுரையாற்றிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆழ்ந்து சிந்தித்தல், மீள்கட்டமைத்தல், பார்த்தல் ஆகிய மூன்று சொல்லாடல்கள் பற்றி விளக்கினார்.

இந்தச் சொல்லாடல்கள், ஐரோப்பாவில், கிறிஸ்தவர்கள் மற்றும், ஆயர்களாகிய நமக்குச் சவாலாக அமைகின்றன என்றுரைத்த திருத்தந்தை, நம் அமைப்புமுறைகள், நம் இல்லங்கள், நம் திருஅவைகள், நம் மரபுகள் வழங்கும் பாதுகாப்பு போன்றவற்றில் திருப்தியடையும் சோதனைக்கு உட்படுகிறோம், அதேநேரம், நம்மைச் சுற்றியுள்ள ஆலயங்கள் காலியாக உள்ளன, மற்றும், இயேசு பற்றிய உணர்வுக்குறைவும் அதிகரித்து வருகின்றது என்று கூறினார்.

ஐரோப்பாவில் ஏராளமானோர், தங்கள் வாழ்விற்கு கடவுள் தேவை என்று உணர்வதைவிட, பொருளாதாரத் தேவைகளில் மட்டுமே திருப்தியடையவதற்குத் தூண்டப்படுகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, நிச்சயமாக மக்களின் இந்நிலை பற்றி நாம் கவலைப்படுகிறோம், ஆனால், அந்நிலையை அகற்றுவது பற்றிய நடவடிக்கைகளை உண்மையிலேயே மேற்கொள்கிறோமா? என்ற கேள்வியையும் ஆயர்களிடம் எழுப்பினார்.

மதத்தைவிட்டு விலகுபவர்களைத் தீர்ப்பிடுவதும், கடவுள் நம்பிக்கையற்று இருப்பதற்கு காரணங்களை அடுக்குவதும் எளிதானது, ஆனால், இன்றைய இறைவார்த்தை, நம்மையே நாம் ஒரு சுயஆய்வு மேற்கொள்ள சவால் விடுக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவைச் சந்திப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்காதவர்கள் மற்றும், அந்த மகிழ்ச்சியை இழந்தவர்கள் மீது அக்கறையும் பரிவிரக்கமும் காட்டுகிறோமா என்று சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தம் பிரசன்னத்தால் நல்மாற்றம் அடைந்த மனிதரின் முகங்களில், கடவுள் தம்மைக் காட்டுகிறார் எனவும், கிறிஸ்தவர்கள், நற்செய்தியின் மகிழ்வைப் பிரதிபலிக்காமல், பக்தி மொழியையே பேசிக்கொண்டிருந்தால், அவர்களால் நல்ல ஆயராம் இயேசுவைக் காட்ட முடியாது எனவும் திருத்தந்தை கூறினார்.

மீள்கட்டமைப்பு

“என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்” (1:8) என்று இறைவாக்கினர் ஆகாய் வழியாய் கடவுள் கூறியவுடன் மக்களும் எருசலேம் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பினர் என்றுரைத்த திருத்தந்தை, ஐரோப்பிய பொதுவான இல்லத்தை மீள்கட்டமைப்பதற்கு, ஐரோப்பாவை நிறுவிய தந்தையரின் தொலைநோக்குப் பார்வைக்கு நாம் திரும்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மற்றவரோடு ஒன்றிணைந்து மீள்கட்டமைப்புப் பணியை மேற்கொள்ளவேண்டும், இவ்வாறு செய்தால், எல்லா நிலைகளிலும் ஒன்றிப்பைக் கட்டியெழுப்பும் கைவினைஞர்களாக நாம் மாறுவோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஐரோப்பிய ஆயர்களிடம் கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2021, 15:02