தேடுதல்

போர்த்துகல் நாட்டு இளையோரிடம் உலக இளையோர் நாள் சிலுவையை வழங்கும் திருப்பலி போர்த்துகல் நாட்டு இளையோரிடம் உலக இளையோர் நாள் சிலுவையை வழங்கும் திருப்பலி 

36வது உலக இளையோர் நாள் - திருத்தந்தையின் செய்தி

இளையோரே, மனத்தளர்ச்சியுற்று, உங்களைப்பற்றிய கவலைகளால் முடக்கப்படாமல், எழுந்து நில்லுங்கள், சமுதாய நீதி, உண்மை, மனித உரிமை என்ற பல விழுமியங்களை உயர்த்திப்பிடிக்க எழுந்து நில்லுங்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

'அன்பு இளையோரே, லிஸ்பனில் 2023ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாளை நோக்கி நீங்கள் மேற்கொண்டுள்ள ஆன்மீக திருப்பயணத்தில், உங்களுடன் கரம் கோர்த்து நடக்கவிழைகிறேன்' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 36வது உலக இளையோர் நாள் செய்தியின் துவக்கத்தில் கூறியுள்ளார்.

"எழுந்து நிமிர்ந்து நில். நீ கண்டது பற்றி சான்று பகர உன்னை ஏற்படுத்தினேன்" (காண்க. திருத்தூதர் பணிகள் 26:16) என்ற தலைப்பில், 36வது உலக இளையோர் நாளுக்கென திருத்தந்தை எழுதியுள்ள செய்தியை, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை செப்டம்பர் 27, இத்திங்களன்று வெளியிட்டது.

“இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு”

கடந்த ஆண்டு பெருந்தொற்றின் தாக்கம் பரவுவதற்கு முன்னர், அவ்வாண்டின் இளையோர் நாள் செய்திக்கு, “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” (காண்க. லூக்கா 7:14) என்று வழங்கப்பட்ட தலைப்பு, இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ள நமக்கு இறைவன் வழங்கிய ஒரு செய்தி போல் இருந்தது என்பதை தன் 36வது உலக இளையோர் நாள் செய்தியின் துவக்கத்தில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தொற்றினால் உருவான துன்பங்களை குடும்பம், சமுதாயம், வேலையின்மை, மனத்தளர்ச்சி ஆகிய பல தளங்களில் இளையோர் சந்தித்தனர் என்பதை குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் விளைவாக உருவான கோபம், வன்முறை ஆகியவை, இளையோரை பெரிதும் பாதித்தன என்பதையும் கூறியுள்ளார்.

இந்த நிலை, நாணயத்தின் ஒரு பக்கமாக இருந்தவேளையில், மற்றொரு பக்கத்தில், இளையோர் திரண்டெழுந்து உதவிகள் செய்தனர் என்பதையும் இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இளையோருக்கு இயல்பாகவே உள்ள பரந்துவிரிந்த, துணிவுள்ள இதயத்தைப் பாராட்டியுள்ளார்.

பெருந்தொற்றைத் தொடர்ந்துவரும் நாள்களில் இறைவன் உங்கள் ஒவ்வொருவரிடமும் 'எழுந்திடு' என்று கூறுகிறார் என்பதை வலியுறுத்திக் கூறும் திருத்தந்தை, தான் வெளியிட்டுள்ள இந்த செய்தி, இளையோரை, இனி வரும் காலங்களுக்கு சரியான முறையில் ஏற்பாடு செய்ய உதவும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

அகிரிப்பா அரசருக்கு முன், திருத்தூதர் பவுல்

அகிரிப்பா அரசருக்கு முன், திருத்தூதர் பவுல் சாட்சியம் வழங்கும் அப்பகுதியிலிருந்து 2021ம் ஆண்டு இளையோர் நாளுக்கென உருவாக்கப்பட்டுள்ள செய்தியின் மையக்கருத்து தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வளவு துணிவுடன் சாட்சியம் பகர புனித பவுலுக்கு துணையாக இருந்தது, அவர், இயேசுவால் தனிப்பட்ட முறையில் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட அந்த அனுபவம் என்பதை இச்செய்தியில் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவுடன் நிகழும் ஒவ்வொரு தனிப்பட்ட சந்திப்பும், வாழ்வை மாற்றுகிறது என்பதை எடுத்துரைத்தார்.

இயேசு, புனித பவுலுக்கு தன்னை அறிமுகப்படுத்திய வேளையில், பவுல் துன்புறுத்திய திருஅவையுடன் தன்னையே அவர் அடையாளப்படுத்திக்கொண்டார் என்று கூறிய திருத்தந்தை, பல இளையோர் இன்று, இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கும் அதே வேளையில் திருஅவை வேண்டாம் என்று கூறுவதை காண்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டி, திருஅவையை விலக்கிவைத்துவிட்டு, இயேசுவை அறிந்துகொள்வது இயலாது என்று குறிப்பிட்டார்.

கடவுளின் கண்களில் யாருமே தொலைந்துபோனவர்கள் அல்ல

தன்னை அழிப்பதற்கு வெறிகொண்டு, புறப்பட்ட ஒருவரை இயேசு தேர்ந்தெடுத்தார் என்று தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் கண்களில் யாருமே தொலைந்துபோனவர்கள் அல்ல, என்றும், அவரை நேருக்கு நேர் சந்தித்தால், நம்மையும் அவர் முழுமையாக பயன்படுத்துவார் என்றும் எடுத்துரைத்தார்.

கிறிஸ்துவை சந்திப்பதற்கு முன்னர், புனித பவுல், தான் என்ற அகந்தை எண்ணங்களால் மட்டுமே நிறைந்திருந்தார் என்றும், தான் செய்தது அனைத்தும் சரியென்று எண்ணி வந்தார் என்றும் குறிப்பிட்டத் திருத்தந்தை, கிறிஸ்துவை சந்தித்தபின், அவரது வாழ்வு முற்றிலும் மாறியது என்று கூறினார்.

தமஸ்கு நகரை நோக்கிச் சென்ற பயணத்தில் இயேசுவைச் சந்தித்த பவுல், தன் மனமாற்றத்திற்குப்பின், தமஸ்கு நகருக்கு தன் பயணத்தைத் தொடர்ந்தார் என்று இச்செய்தியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பவுல் மேற்கொண்ட பயணப்பாதை மாறவில்லை என்றாலும், அந்தப் பயணத்தின் துவக்கத்தில் பவுல் கொண்டிருந்த நோக்கம் முற்றிலும் மாறியது என்பதை எடுத்துரைத்தார்.

புனித பவுல் தன் இயல்பிலேயே கொண்டிருந்த ஆர்வம், தீவிரம் அனைத்தையும் சிறிதும் மாற்றாமல், அவற்றை, தன் பணிக்கென இயேசு பயன்படுத்தினார் என்பதையும் திருத்தந்தை தன் செய்தியில் அடிக்கோடிட்டு காட்டினார்.

"எழுந்து நிமிர்ந்து நில். சான்று பகர்வாய்"

"எழுந்து நிமிர்ந்து நில். சான்று பகர்வாய்" என்ற அழைப்பு திருமுழுக்கு பெற்ற நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள அழைப்பு என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'எழுந்து நிமிர்ந்து நில்' என்ற எண்ணத்தை பல்வேறு சூழல்களில் பயன்படுத்தி, இளையோருக்கு இச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

மனத்தளர்ச்சியுற்று, உங்களைப்பற்றிய கவலைகளால் முடக்கப்படாமல், எழுந்து நில்லுங்கள், சமுதாய  நீதி, உண்மை, மனித உரிமை என்ற பல விழுமியங்களை உயர்த்திப்பிடிக்க எழுந்து நில்லுங்கள், வறியோரை, துன்புறுவோரை, வலுவற்றோரை, புலம்பெயர்ந்தோரை, காப்பாற்ற எழுந்து நில்லுங்கள், என்று, பல்வேறு சூழல்களை குறிப்பிட்டு, திருத்தந்தை, இச்செய்தியின் இறுதியில், இளையோருக்கு சிறப்பான அழைப்பை விடுத்துள்ளார்.

2021ம் ஆண்டு, நவம்பர் மாதம், கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று சிறப்பிக்கப்படும் இளையோர் நாளை, தலத்திருஅவைகளில் கொண்டாடவும், 2023ம் ஆண்டு, லிஸ்பன் நகரில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கவும் அனைத்து இளையோருக்கும் அழைப்பு விடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 36வது உலக இளையோர் நாள் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2021, 13:59