தேடுதல்

பிராத்திஸ்லாவாவில் யூத சமுதாயத்திற்கு திருத்தந்தையின் உரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

செப்டம்பர் 13, இத்திங்கள் மாலையில் பிராத்திஸ்லாவா நகரில் அமைந்துள்ள Rybné námestie வளாகத்தில் யூத மதத்தைச் சார்ந்தவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தபோது, அவர்களுக்கு வழங்கிய உரையின் சுருக்கம்: 

யூத சமுதாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பிராத்திஸ்லாவா Rybné námestie வளாகத்தில் உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  கடந்த கால நினைவுகளை பாதுகாக்கும் இடமாக இது உள்ளது. பல நூற்றாண்டுகளாக யூதர்களின் குடியிருப்பாக இருந்த இங்குதான் புகழ்வாய்ந்த யூத மத ரபி Chatam Sofer பணியாற்றினார். இங்குதான் யூத மத கோவில் ஒன்று, பேராலயத்தின் பக்கத்தில் எழுந்துநின்றது. கடவுளின் பெயரால் மனிதகுல உடன்பிறந்த நிலையால் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த இடத்தில், நானும் என் காலணிகளை கழற்றிவிட்டு நிற்க ஆவல் கொள்கின்றேன்.

சுமூகமாகச் சென்றுகொண்டிருந்த உடன்பிறந்தநிலை வாழ்வில், பிற்காலத்தில் இறைவனின் திருப்பெயர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. பகைமை வெறியுடன், இரண்டாம் உலகப்போரின்போது, பல நூறாயிரம் சுலோவாக்கிய யூதர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த அடையாளத்தையே அழிக்கும் நோக்கத்தில், யூத மத கோவில், முற்றிலுமாக சேதமாக்கப்பட்டது. மற்றவர்களை மதித்து அன்புகூர மறுக்கும்போது, இறைவனின் பெயர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது.

அன்பு சகோதரரே, சகோதரிகளே, உங்கள் வரலாறு என்பது எங்கள் வரலாறு, உங்கள் துயர்கள், எங்களின் துயர்களும்கூட. பேரழிவை நினைவூட்டி நிற்கும் இந்த இடம்தான், உங்களில் பலருக்கு, உங்கள் உறவினர்களின் நினைவுகளை கௌரவிக்கும் இடமாக உள்ளது. இந்த நினைவிடத்தில் “zechor”, அதாவது, “நினைவில் கொள்க!” என்பது எபிரேய மொழியில் எழுதப்பட்டுள்ளது. கடவுளின் திருப்பெயர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்படாமல் இருப்பதற்கு நாம், ஒருவருக்கொருவர் உதவுவோம். அதிகாரம், பணம், அக்கறையற்ற நிலை என்பவைகளில், நாம், கடவுளின் திருப்பெயரை, தவறாகப் பயன்படுத்துகிறோம். இறைவனால் படைக்கப்பட்ட மனிதனில் காணப்படும் இறைச்சாயலுக்கு அவமதிப்பு நேராவண்ணம், ஒன்றிணைந்து, வன்முறைகளுக்கும் யூத விரோதப் போக்குகளுக்கும் எதிராக உழைப்போம்.

நம்பிக்கையின் ஒளியைப் பாய்ச்சும் இடமாகவும் இந்த நினைவிடம் உள்ளது. Hanukkah திருவிழாக்காலத்தில், இங்கு வந்துதான் முதல் ஒளியை ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். இந்த வளாகத்தில் எழும்பி நின்ற யூதக்கோவில் அழிவுக்குள்ளானபோதும், யூத சமுதாயம், உயிர்த்துடிப்புடன் உள்ளது. நம்மிடையே நிலவும் நெருக்கம், மற்றும் நட்புணர்வின் பாதையில் நிலைத்திருப்பதற்குரிய விருப்பத்தை, இறைவனின் முன்னிலையில் உறுதிச்செய்வோம்.

உங்களின் யூத, மற்றும் கிறிஸ்தவ சமுதாயங்களின் பிரதிநிதிகளை, 2017ம் ஆண்டு, உரோம் நகரில் சந்தித்த நினைவுகள் இன்னும் என்னுள் பசுமையாக உள்ளன. அதன் பின் கத்தோலிக்கத் திருஅவையுடன் உரையாடல்களை மேற்கொள்வதற்கென உங்களால் ஓர் அவை துவக்கப்பட்டதையும், அதன் வழியாக, பல ஏடுகள் வெளியிடப்பட்டத்தையும் இங்கு மகிழ்வுடன் குறிப்பிடுகிறேன். இரு பக்கமும் கதவுகளைத் திறந்துள்ள உங்களுக்கு நன்றி நவில்கின்றேன்.

நம் உலகிற்கு, திறந்த கதவுகள் தேவைப்படுகின்றன. அவை, ஆசீரின் அடையாளங்கள். ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார் (தொ.நூ. 12:3). இது நம் முற்கால முதுபெரும் தந்தையர்களின் வாழ்வில் அடிக்கடி நடந்துள்ளது (தொ.நூ. 18:18; 22:18; 26:4). இறைவன் யாக்கோபை நோக்கி, "உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் பரவிச்செல்வாய். உன்னிலும் உன் வழிமரபிலும் மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசிபெறுவன" (தொ.நூ. 28:14) என உரைப்பதையும் காண்கிறோம். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு,  ஆகிய நான்கு திசைகளுக்குமிடையே சந்திப்புகள் இடம்பெறும் இந்த சுலோவாக்கிய மண்ணில் வாழும் யூத சமுதாயம்,  தொடந்து அனைத்துக் குடும்பங்களுக்குரிய ஆசீரின் அடையாளமாக இருந்து, அமைதியின் சான்றுகளாகச் செயல்பட இறைவன் ஆசீர்வதிப்பாராக. Shalom!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2021, 14:06