தேடுதல்

திருச்சிலுவை திருநாளன்று திருத்தந்தையின் மறையுரை

திருத்தந்தை பிரான்சிஸ் - சிலுவை, ஒரு கொலைக்கருவியாக இருந்தது, ஆனால், அதுவே வாழ்வின் ஊற்றாக மாறியது. எனவேதான், இன்றையத் திருநாளில், இறைமக்கள், சிலுவையை வணங்கி, அதை திருவழிபாடாகக் கொண்டாடுகின்றனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 14, இச்செவ்வாயன்று, திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியா நாட்டின் Prešov நகரில் நடைபெற்ற Byzantine முறை இறை வழிபாட்டில் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, "நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம்... கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்" என்று புனித பவுல் கூறுகிறார். அதே வேளையில், சிலுவை மனித அறிவுக்கு, 'தடைக்கலாகவும்', 'மடமையாகவும்' இருப்பதை, புனித பவுல் மறைக்காமல் கூறியுள்ளார். (1 கொரி. 1:23-24). சிலுவை, ஒரு கொலைக்கருவியாக இருந்தது, ஆனால், அதுவே வாழ்வின் ஊற்றாக மாறியது. அச்சமூட்டும் அந்தக் காட்சி, கடவுள் அன்பின் அழகை வெளிப்படுத்தியது. எனவேதான், இன்றையத் திருநாளில், இறைமக்கள், சிலுவையை வணங்கி, அதை திருவழிபாடாகக் கொண்டாடுகின்றனர்.

யோவான் நற்செய்தி, நம்மை, கரம்பிடித்து அழைத்துச்சென்று, சிலுவை என்ற மறையுண்மையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த நற்செய்தியாளர் சிலுவையின் அடியில் நின்றுகொண்டிருந்தார். எனவே, அவர், "இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி" (யோவான் 19:35) என்று எழுதியுள்ளார். அவர் கண்டார், சாட்சி பகர்ந்தார்.

முதலில் வருவது, காணுதல். சிலுவையின் அடியில் நின்றவண்ணம் யோவான் என்ன கண்டார்? நிச்சயம், மற்றவர்கள் கண்டதை அவரும் கண்டார்: அதாவது, குற்றமற்ற, நல்ல மனிதரான இயேசு, இரு குற்றவாளிகளுக்கிடையே, சிலுவையில் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டார். இவ்வுலகில் நிகழ்ந்துவரும் அநீதிகளில், நல்லவர்கள் அழிவதும், பொல்லாதவர்கள் தழைப்பதும் தொடர்கிறது. உலகின் கண்களில் சிலுவை, தோல்வியின் அடையாளமாக உள்ளது. நாமும் இந்த மேலோட்டமான கண்ணோட்டத்தில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது. இவ்வுலகின் அனைத்து தீமைகளும் தன்னைத் தாக்குவதற்கு அனுமதித்து அதன் வழியே நம்மைக் காக்கும் கடவுளை ஏற்றுக்கொள்ள நாம் தயங்கலாம். சக்தியேதும் இன்றி, சிலுவையில் அறையப்பட்ட கடவுளைவிட, சக்தி மிகுந்த, வெற்றியடையும் கடவுளை நாம் கனவு காண்கிறோம். வெற்றியாளர்களைக் கொண்ட கிறிஸ்துவத்திற்காக நாம் ஏங்குகிறோம். ஆனால், சிலுவை இல்லாத கிறிஸ்தவம், உலகப்போக்கில் செல்லும் கிறிஸ்தவம். அது, கனிகள் தர இயலாது.

இதற்கு மாறாக, புனித யோவான், சிலுவையில், இறைவனின் செயல்பாட்டைக் கண்டார். அறையப்பட்ட இயேசுவில், அவர், இறைவனின் மகிமையை உணர்ந்துகொண்டார். இயேசு என் அவ்வாறு செய்தார்? மனித வரலாற்றில் நிகழ்ந்த கொடுமைகளைவிட்டு விலகி நின்று, அவர் தன் உயிரைக் காத்துக்கொண்டிருக்கலாம். அதற்குப்பதில், அவர், வரலாற்றில் தன்னையே மூழகடித்துக்கொண்டார். எனவேதான், அவர், மிகக் கடினமான சிலுவையைத் தெரிவுசெய்தார். உலகில், துன்புறும் யாரும், கைவிடப்பட்ட யாரும், தங்கள் துன்பங்கள் நடுவே அவரைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக, அவ்வாறு செய்தார். விரக்தியில் இருப்போரைக் காப்பதற்காக, தன்னையே விரக்தியில் ஆழ்த்திக்கொண்ட இயேசு, சிலுவையிலிருந்து, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார். (மத். 27:46)

சிலுவையில் நாம் மகிமையை எவ்வாறு காண்பது? சிலுவை ஒரு நூல் என்று, ஒரு சில புனிதர்கள் கூறியுள்ளனர். புதிய நூலை வாங்கி, அதன் வெளிப்புறத்தை மட்டும் பார்த்துவிட்டு, அதை அலமாரியில் வைத்துவிடக்கூடாது. அதைத் திறந்து படிக்கவேண்டும். அதேவண்ணம், சிலுவையை ஓர் அடையாளமாக நம் வீடுகளிலோ, கழுத்திலோ, வாகனத்திலோ, மாட்டிவைத்தால் மட்டும் போதாது. அந்த சிலுவையையும், அதில் அறையப்பட்டவரின் அன்பையும் ஆழமாக உணரவேண்டும். சிலுவையை, வணக்கத்திற்குரிய ஒரு பொருளாக மட்டும் மாற்றிவிடுவதோ, அல்லது, நம் மதம், மற்றும், சமுதாய நிலையின் அரசியல் அடையாளமாக மாற்றிவிடுவதோ கூடாது.

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை தியானிப்பது, நம்மை, சாட்சியம் பகர்தல் என்ற அடுத்த நிலைக்குக் கொணர்கிறது. அவரை, மிக ஆழமாக தியானிப்பதன் வழியே, அவரது முகம், நம் முகத்தில் பிரதிபலிக்கிறது. இவ்வேளையில், கிறிஸ்துவின் அன்புக்காக, இந்நாட்டில் தங்கள் உயிரைத்துறந்த மறைசாட்சிகளை எண்ணிப்பார்க்கிறேன். கிறிஸ்துவை, தங்கள் வாழ்வில் பிரதிபலித்த அவர்கள், மரணத்திலும், அவரது மரணத்தை பிரதிபலித்துள்ளனர்.

நாம் வாழும் இந்தக் காலத்தையும் எண்ணிப்பார்க்கிறேன். இன்றும், இயேசுவுக்கு சாட்சியம் பகர, பல வாய்ப்புகள் உள்ளன. நம் சாட்சியம், இவ்வுலகப் போக்கினால் மதிப்பு குறைந்துபோகக்கூடும். சிலுவையின் சாட்சிகள், தங்களுக்கு இழைக்கப்பட்ட பழைய காலங்களிலேயே தங்கிவிடுவதில்லை. இந்த சாட்சிகள் தங்கள் தலைவரைப்போல், பணிவுள்ள அன்பு கொண்டவர்கள். அவர்கள், இவ்வுலகில், வெற்றிகளைத் தேடிச்செல்வதில்லை.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, நீங்கள், இத்தகைய சாட்சிகளை, உங்கள் வாழ்வில் கண்டிருக்கிறீர்கள். அவர்களின் நினைவை போற்றி வளர்த்து வாருங்கள். சாட்சிகள், ஏனைய சாட்சிகளை உருவாக்குகின்றனர். ஏனெனில், அவர்கள் வாழ்வை வழங்குபவர்கள். இவ்வாறுதான் நம் நம்பிக்கை பரவுகிறது. இன்று, சிலுவையின் அமைதியிலிருந்து, ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் பார்த்து, நீ என் சாட்சியாக இருக்க விரும்புகிறாயா? என்று கேட்கிறார்

அன்று, கல்வாரியில், யோவானுடன், இறைவனின் புனித அன்னையும் நின்றுகொண்டிருந்தார். சிலுவை என்ற நூலை, அந்த அன்னையைப்போல் வேறு யாரும் அத்தனை ஆழமாகப் படித்ததில்லை. அறையப்பட்ட கிறிஸ்துவின் பக்கம் நம் இதயக்கண்களைத் திருப்ப, அன்னையின் பரிந்துரையை நாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2021, 13:57