தேடுதல்

'Arché' அறக்கட்டளை உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 'Arché' அறக்கட்டளை உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

'Arché' அறக்கட்டளையினருக்கு திருத்தந்தையின் வாழ்த்து

கைவிடப்பட்ட அன்னையருக்கும், குழந்தைகளுக்கும் வரவேற்பும், புகலிடமும் வழங்கும் 'Arché' அறக்கட்டளை, இத்தாலியின் மிலான், உரோம் உட்பட ஒருசில நகரங்களில், இல்லங்களை உருவாக்கி, பணியாற்றி வருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அனைத்து வாழ்வும், அனைத்து அழகும், அனைத்து நன்மைத்தனமும், அனைத்து உண்மையும், அன்பே உருவான இறைவனிடமிருந்தே வருகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த 'Arché' அறக்கட்டளை உறுப்பினர்களிடம் கூறினார்.

கைவிடப்பட்ட அன்னையர் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கும்வண்ணம் இத்தாலியின் மிலான் நகரில், 1991ம் ஆண்டு, அருள்பணி ஜியுசெப்பே பெத்தோனி அவர்களால் உருவாக்கப்பட்ட பிறரன்பு அமைப்பான 'Arché' அறக்கட்டளை, தன் 20வது ஆண்டு நிறைவைச் சிறப்பிப்பதையடுத்து, இவ்வறக்கட்டளையின் உறுப்பினர்கள், செப்டம்பர் 2, இவ்வியாழன் நண்பகலில் திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்தனர்.

இவ்வறக்கட்டளையும், அதனை உருவாக்கிய அருள்பணி பெத்தோனி அவர்களும், 20 ஆண்டுகளாக, அன்னையருக்கும், குழந்தைகளுக்கும் அளித்துவரும் வரவேற்பையும், அவர்களுக்கு வழங்கும் விருந்தோம்பலையும், திருத்தந்தை பாராட்டினார்.

குழந்தையுடன் காணப்படும் அன்னை, கிறிஸ்த மதத்தின் மிக முக்கியமான, அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஓர் உருவம் என்று, தன் வாழ்த்துரையில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையச் சூழலில், குழந்தைகளை வளர்க்க இயலாமல் தவிக்கும் பல அன்னையருக்கு, 'Arché' அறக்கட்டளை ஆற்றிவரும் அரும்பணிகளுக்கு தன் நன்றியைத் தெரிவித்தார்.

இவ்வறக்கட்டளை, செப்டம்பர் 4 இச்சனிக்கிழமை, உரோம் நகரில் ஒரு புதிய இல்லத்தை ஆரம்பித்து, அங்கு புதியதொரு குழுமத்தை உருவாக்கவிருப்பதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, அந்த இல்லமும், இன்னும் இந்த அறக்கட்டளையால் நடத்தப்படும் அனைத்து இல்லங்களும் இறைவனின் அருகாமையையும், அரவணைப்பையும் மக்களுக்கு உணர்த்தும் நற்பணிக்கு தன் ஆசீரும், செபங்களும் உண்டு என்று கூறி, தன் குறுகிய வாழ்த்துரையை நிறைவு செய்தார்.

HIV என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கென, 1991ம் ஆண்டு, இத்தாலியின் மிலான் நகரில், அருள்பணி ஜியுசெப்பே பெத்தோனி அவர்கள் உருவாக்கிய முதல் இல்லம், நாளடைவில், 'Arché' அறக்கட்டளையாக மாறியது.

நோயினாலும், வேறுபல காரணங்களாலும் கைவிடப்பட்ட அன்னையருக்கும், குழந்தைகளுக்கும் வரவேற்பும், புகலிடமும் வழங்க, 'Arché' அறக்கட்டளை தற்போது, இத்தாலியின் மிலான், உரோம் உட்பட ஒருசில நகரங்களில், இல்லங்களை உருவாக்கி, பணியாற்றி வருகிறது.

380 தன்னார்வத் தொண்டர்களின் உதவியோடு நடைபெற்றுவரும் 'Arché' அறக்கட்டளை, 2020ம் ஆண்டு, 3,024 அன்னையருக்கும், 1,726 குழந்தைகள் மற்றும் சிறாருக்கும் உதவிகள் செய்துள்ளதென்று, இவ்வறக்கட்டளையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2021, 14:06