தேடுதல்

'படைப்பின் காலம்' அறிவிப்பை கையிலேந்தி நிற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 'படைப்பின் காலம்' அறிவிப்பை கையிலேந்தி நிற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

படைப்பின் காலத்தில், பயனுள்ள முயற்சிகளை மேற்கொள்ள...

இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் படைப்பின் காலம், "இவ்வுலகம், அனைவருக்கும் உரிய இல்லமா? கடவுளின் இல்லத்தை மீண்டும் புதுப்பிக்க" என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்பட்டு வருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு நவம்பர் முதல் தேதி, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் துவங்கும் COP26 சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டிற்கு ஒரு தயாரிப்பாக, செப்டம்பர் 1, இப்புதன் முதல், அக்டோபர் 4ம் தேதி முடிய நடைபெறும் படைப்பின் காலத்தில், அனைவருக்கும் பயனளிக்கும் நல்ல முயற்சிகளை மேற்கொள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வுலகம் எழுப்பும் அழுகுரலும், எளியோர் எழுப்பும் அழுகுரலும் அண்மையக் காலங்களில் மிகத் தீவிரமாக ஒலிக்கின்றன என்றும், அவை, நம்மை கடுமையாக எச்சரிக்கின்றன என்றும், அண்மையில் வழங்கிய மூவேளை செப உரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள், இந்த படைப்பின் காலத்தையொட்டி, துரிதமான, தீர்க்கமான முடிவுடன் கூடிய செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தார்.

இயற்கையை மதித்து, அதனுடன் இயைந்து செல்லும் எளிமையான ஒரு வாழ்வை நாம் பின்பற்றவேண்டும் என்றும், சுற்றுச்சூழல் மாற்றங்களை குறைப்பதற்கு இளையோர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும், செப்டம்பர் 1, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட செப்டம்பர் மாத செபக்கருத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

காலநிலை மாற்றத்தையும், சுற்றுச்சூழலையும் மையப்படுத்தி, ஐ.நா. நிறுவனம், ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட்ட IPCC அறிக்கை, சுயநலத்தால், மனிதர்கள் மேற்கொண்டுள்ள வரம்பு மீறிய செயல்பாடுகளால், நம் சுற்றுச்சூழல் மீண்டுவர இயலாத அளவு சீரழிந்து வருகிறது என்பதை, மிகத் தீவிரமான எச்சரிக்கையாக விடுத்துள்ளது.

இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் படைப்பின் காலம், "இவ்வுலகம், அனைவருக்கும் உரிய இல்லமா? கடவுளின் இல்லத்தை மீண்டும் புதுப்பிக்க" என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

நவம்பர் மாதம் துவங்கவிருக்கும் COP26 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களுக்கென, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை, 'Healthy Planet - Healthy People', அதாவது, "நலம் நிறைந்த பூமிக்கோளம், நலமான மக்கள்" என்ற பெயரில் ஒரு விண்ணப்பத்தை தயார் செய்து, அதில் மக்கள் அனைவரும் கையொப்பமிடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2021, 14:15