தேடுதல்

பிராத்திஸ்லாவாவில் யூத சமுதாய சந்திப்பு பிராத்திஸ்லாவாவில் யூத சமுதாய சந்திப்பு 

பிராத்திஸ்லாவாவில் திருத்தந்தை, யூத சமுதாயம் சந்திப்பு

கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதரின் வாழ்வின் புனிதத்தைக் காப்பாற்றுவதற்காக, இரண்டாம் உலகப்போரின்போது துணிச்சலோடு செயலாற்றிய தனது சபை சகோதரிகளை நன்றியோடு நினைக்கின்றோம் - அருள்சகோதரி சாமுவேலா, ஊர்சுலைன் சபை

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 12, இஞ்ஞாயிறன்று துவக்கிய, நான்கு நாள் கொண்ட, அவரது 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளான, செப்டம்பர் 13, இச்செவ்வாயன்று, பிராத்திஸ்லாவாவின் Rybne namestie வளாகத்தில், அந்நாட்டில் வாழ்கின்ற யூத சமுதாயத்தைச் சந்தித்து உரையாற்றினார். சுலோவாக்கியா நாட்டின் தலைநகரான, பிராத்திஸ்லாவாவின் Rybne namestie வளாகப் பகுதியில், 1251ம் ஆண்டில், யூத சமுதாயம் முதன் முதலில் குடியேறத் துவங்கியது. அச்சமுதாயம் அங்கு தொழுகைக்கூடத்தையும் அமைத்திருந்தது. 1930ம் ஆண்டில், அந்நகரில் வாழ்ந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேரில், 15 ஆயிரம் பேர் யூதர்கள். ஆனால், 1930களின் இறுதியில், அந்த யூத சமுதாயம், யூதமதவிரோதப்போக்கால் அச்சுறுத்தப்பட்டது. 1939ம் ஆண்டில் உருவான சுலோவாக் அரசும், யூத சமுதாயத்திற்கெதிரான பாகுபாட்டு விதிமுறைகளைக் கொண்டுவந்தது. இரண்டாம் உலகப் போரின் போது, பிராத்திஸ்லாவாவில் வாழ்ந்த ஏறத்தாழ அனைத்து யூதர்களும், வதைமுகாம்கள் அல்லது, தொழில் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அந்நகரில் வாழ்ந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட யூதர்களில் ஏறத்தாழ 11,500 பேர், யூத இனப்படுகொலை நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். யூத இனத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கத்துடன், 1969ம் ஆண்டில், கம்யூனிச அரசு, அவர்களின் தொழுகைக்கூடத்தை தரைமட்டமாக்கியது. தற்போது அவ்விடத்தில் ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 1989ம் ஆண்டில், சுலோவாக்கியாப் பகுதியில் கம்யூனிசம் வீழ்ச்சியுற்றபின், பிராத்திஸ்லாவாவில் மீண்டும் யூத சமுதாயம் வளரத் தொடங்கியது. இன்று, பிராத்திஸ்லாவாவில் ஏறத்தாழ 500 பேர் வாழ்கின்றனர். அவர்களில் 180 பேரை, அந்நகரின் Rybne namestie வளாகத்தில், செப்டம்பர் 13, இச்செவ்வாய் மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார்.

சாட்சியங்கள்

இச்சந்திப்பில் முதலில், 79 வயது நிரம்பிய பேராசிரியர் Tomáš Lang அவர்கள், திருத்தந்தையிடம் இவ்வாறு சாட்சியம் கூறினார். தான், இரண்டாம் உலகப்போரின் போது, சுலோவாக்கியாவில் இடம்பெற்ற யூத இனப்படுகொலையில் உயிர்தப்பிய ஏறத்தாழ 3,500 பேரில் ஒருவர். உக்ரைனில் போரிடும்போது எனது தந்தை இறந்தார். ஜெர்மனியின் நாத்சி அரசு, யூதர்களை அணிவகுத்து நடத்தியபோது எனது தாய் இறந்தார். அச்சமயத்தில், மருத்துவமனை ஒன்றின், ஒரு பகுதியில் மறைத்துவைக்கப்பட்ட சிறாரில் ஒருவர்தான் நான். அப்பகுதியில் இராணுவத்தினர் நுழைந்துவிடாமல் இருப்பதற்காக, இது தொற்றுநோய் பகுதி என்று செவிலியர்கள், அதன் வாயிலில் எழுதி வைத்திருந்தனர்.  பின்னர் அந்த மருத்துவமனையும் குண்டுபோட்டு தாக்கப்பட்டது. அதில் 15 சிறாரும், செவிலியர் ஒருவருமே உயிர் பிழைத்தனர். தற்போது எனக்கு இரு பிள்ளைகளும், 6 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். என்னைக் காப்பாற்றிய அந்த செவிலியரைப் பார்த்து நன்றி சொல்ல முடியாமல் இருப்பதற்காக, எப்போதும் ஒருவித கவலை என்னில் உள்ளது. இத்தகைய ஒரு கொடுமை, இனி ஒருபோதும் இடம்பெறக்கூடாது என்பதற்காக உழைத்து வருகிறேன். இவ்வாறு லாங் அவர்கள், திருத்தந்தையிடம் சாட்சியம் கூறியவுடன், ஊர்சுலைன் சபையின் அருள்சகோதரி சாமுவேலா அவர்கள், இரண்டாம் உலகப்போரின்போது, சுலோவாக்கியாவில், யூதமதச் சிறாரையும், வயதுவந்தோரையும், காப்பாற்றுவதற்காக, தனது சபை அருள்சகோதரிகள், அவர்களை மறைத்து வைத்திருந்தது பற்றிய பல்வேறு நிகழ்வுகளை திருத்தந்தையிடம் பகிர்ந்துகொண்டார். கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட மனிதரின் வாழ்வின் புனிதத்தைக் காப்பாற்றுவதற்காக, துணிச்சலோடு செயலாற்றிய தனது சபை சகோதரிகளை நன்றியோடு நினைவுகூர்வதாகவும், அருள்சகோதரி சாமுவேலா அவர்கள் கூறினார்.

அருள்சகோதரி சாமுவேலா சாட்சியம்
அருள்சகோதரி சாமுவேலா சாட்சியம்

இவ்விருவரின் சாட்சியங்களைக் கேட்ட திருத்தந்தை, அந்த நிகழ்வில் கலந்துகொண்ட யூதர்களுக்கு உரையாற்றினார். சுமூகமாகச் சென்றுகொண்டிருந்த உடன்பிறந்தநிலை வாழ்வில், பிற்காலத்தில் இறைவனின் திருப்பெயர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. மற்றவர்களை மதித்து அன்புகூர மறுக்கும்போது, இறைவனின் பெயர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது என்று திருத்தந்தை கூறினார். மேலும், உங்களின் துன்பங்கள், எங்களது துன்பங்கள் என்று உருக்கமான உரையை நிகழ்த்தி, அங்கிருந்து, பிராத்திஸ்லாவா திருப்பீட தூதரகம் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு, சுலோவாக்கியா நாட்டுப் பாராளுமன்றத் தலைவர் Boris Kollar அவர்களையும், பிரதமர் Eduard Heger அவர்களையும் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார். Kollar அவர்களுக்கு பத்து பிள்ளைகளும், Heger அவர்களுக்கு நான்கு பிள்ளைகளும் உள்ளனர். திருத்தந்தை, இந்த இரு தந்தையரைச் சந்தித்ததோடு, இத்திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாள் பயண நிகழ்வுகள் நிறைவுற்றன

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2021, 14:16