தேடுதல்

சுற்றுச்சூழல் பாதிப்பு சுற்றுச்சூழல் பாதிப்பு 

படைப்பைப் பாதுகாப்பதற்கு கிறிஸ்தவத் தலைவர்களின் செய்தி

அனைவரும் பாதுகாப்பாக இல்லாவிட்டால், ஒருவரும் பாதுகாப்பாக இருக்க இயலாது என்பதை, ஓராண்டிற்கு மேலாக உலகைப் பாதித்துவரும் பெருந்தொற்று உணர்த்தியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு செப்டம்பர் ஒன்று முதல், அக்டோபர் 4ம் தேதி வரை, கிறிஸ்தவ சபைகளில் சிறப்பிக்கப்பட்டுவரும் படைப்பின் காலத்திற்கென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டீன் வெல்பி அவர்களும், கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களும் இணைந்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளில், நாம் ஒருவர் ஒருவரைச் சார்ந்து இருக்கின்றோம் என்பதையும், அனைவரும் பாதுகாப்பாக இல்லாவிட்டால், ஒருவரும் பாதுகாப்பாக இருக்க இயலாது என்பதையும், ஓராண்டிற்கு மேலாக உலகைப் பாதித்துவரும் பெருந்தொற்று உணர்த்தியுள்ளது என்று, அச்செய்தி கூறுகிறது.

நம் செயல்கள் உண்மையிலேயே மற்றவரைப் பாதிக்கின்றன என்பதையும், இன்று நாம் செய்வது, நாளைய தினத்தைப் பாதிக்கின்றது என்பதையும் பெருந்தொற்று உணர்த்தி வருகிறது என்றுரைக்கும் அச்செய்தி, நாம் எத்தகைய உலகை வருங்காலத்திற்கு விட்டுச்செல்ல விரும்புகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்குமாறும் அழைப்பு விடுக்கிறது.

நீயும், உன் பிள்ளைகளும் வாழ்வதற்கு ஏற்றதொரு வாழ்வைத் தேர்ந்துகொள் என்று கடவுள் கட்டளையிடுகிறார் (இ.ச.30:19).  என்றும், நாம் வித்தியாசமாக வாழ்வதற்குக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அச்செய்தி வலியுறுத்துகிறது.

நம் பூமிக்கோளத்தின் வருங்காலம் குறித்து சிந்திப்பதற்கு வருகிற நவம்பரில் கிளாஸ்கோ நகரில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளனர், அதற்காக நாம் கடவுளை மன்றாடுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ள அச்செய்தி, இப்பூமி மற்றும், ஏழைகளின் அழுகுரல்களைக் கேட்போம் எனவும், கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள பூமியைப் பாதுகாப்பதற்கு அர்த்தமுள்ள வகையில் தியாகங்கள் செய்வோம் எனவும் கூறியுள்ளது.

கடவுளின் படைப்பைப் பராமரிப்பது, ஓர் ஆன்மீகக் கடமையாகும் எனவும், நம் பிள்ளைகள், மற்றும், நம் பொதுவான இல்லத்தின் வருங்காலம் நம்மைச் சார்ந்துள்ளது எனவும், கிறிஸ்தவத் தலைவர்களின் செய்தி கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2021, 15:22