தேடுதல்

பன்னாட்டு கத்தோலிக்க சட்டஅமைப்பாளர் கூட்டமைப்பினர் சந்திப்பு பன்னாட்டு கத்தோலிக்க சட்டஅமைப்பாளர் கூட்டமைப்பினர் சந்திப்பு 

கத்தோலிக்க சட்டஅமைப்பாளர்கள், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு...

மனித மாண்பு அச்சுறுத்தப்படும் இடங்களிலெல்லாம், கொள்கைகள், மற்றும், விதிமுறைகள் வழியாக, அதை, பாதுகாக்கவேண்டும் - சட்ட அமைப்பாளர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பொதுவான நலனுக்கு உதவுவதற்கு வழிகாட்டுவதன் வழியாக, மிகவும் உறுதியான வருங்காலத்தை உருவாக்குமாறு, பன்னாட்டு கத்தோலிக்க சட்டஅமைப்பாளர் கூட்டமைப்பை, ஆகஸ்ட் 27, இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பன்னாட்டு கத்தோலிக்க சட்டஅமைப்பாளர் கூட்டமைப்பினர் நடத்தும் கூட்டத்தில் பங்குகொள்ளும், ஏறத்தாழ 200 பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, தொழில்நுட்பத்தை, பொதுவான நலனுக்கென நிர்வகிப்பது, நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக உள்ளது என்று கூறினார்.

திருஅவையின் பணிகளுக்குச் சான்றுகளாக விளங்கி, ஒத்துழைப்பை நல்கிவரும் இந்த அமைப்பினருக்கு தன் நன்றியைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு, மற்றும், அவற்றின் விநியோகம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், கோவிட்-19 பெருந்தொற்று, உலகைத் தொடர்ந்து அச்சுறுத்திவருகின்றது என்று கூறினார்.

இந்த கொடூரமான பெருந்தொற்றால், இருபது கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்றும், நாற்பது இலட்சம் இறப்புக்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இந்நோய், மிகப்பெரும் பொருளாதார மற்றும், சமூகச் சீரழிவை உருவாக்கியுள்ளது எனவும், திருத்தந்தை கவலை தெரிவித்தார்.

இதனால், சட்ட அமைப்பாளர்கள், மற்றும், அரசியல்வாதிகளின் பணி, முன்பு இருந்ததைவிட, இப்போது மிகவும் முக்கியமானது என்றுரைத்த திருத்தந்தை, சமுதாயத்திற்குப் பணியாற்றுவது என்பது, வறுமை, சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை, கல்விபெற வசதியின்மை போன்றவை உட்பட, பெருந்தொற்று உருவாக்கியுள்ள சமூகப் பிரச்சனைகளின் அடிப்படையான காரணங்களை அகற்றவேண்டியது சட்டஅமைப்பாளர்களின் கடமை என்பதை வலியுறுத்திக் கூறினார். 

[ Photo Embed: கத்தோலிக்க சட்டஅமைப்பாளர் கூட்டமைப்பு] 

மனித மாண்பு அச்சுறுத்தப்படும் இடங்களிலெல்லாம், கொள்கைகள், மற்றும், விதிமுறைகள் வழியாக, அதை, பாதுகாக்கவேண்டும் என்றும், தங்களின் குறிப்பிட்ட திறமைகளை, அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காக வழங்க முன்வரவேண்டும்  என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சட்ட அமைப்பாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

2010ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பன்னாட்டு கத்தோலிக்க சட்டஅமைப்பாளர் கூட்டமைப்பு, தங்கள் நாடுகளில் ஆற்றும் மக்கள் பணியில், நற்செய்திக்குச் சான்றுகளாய் விளங்குவதன் வழியாக, திருப்பீடத்தின் பணிகளுக்கு ஆதரவாக இருக்கும் வழிகளில் ஈடுபட்டுள்ளது.

27 August 2021, 15:01