தேடுதல்

தென் சூடானில் தற்காப்பு பயிற்சி பெறுவோர் தென் சூடானில் தற்காப்பு பயிற்சி பெறுவோர் 

தென் சூடான் சகோதரிகள் கொலை – திருத்தந்தையின் அனுதாபம்

இரு அருள்சகோதரிகள் தென் சூடான் நாட்டில், வன்முறை குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டு, தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திரு இருதய அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்த இரு அருள்சகோதரிகள் தென் சூடான் நாட்டில், ஆகஸ்ட் 16, இத்திங்களன்று வன்முறை குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டு, தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

உகாண்டா நாட்டையும், தென் சூடான் நாட்டின் தலைநகர் Jubaவையும் இணைக்கும் துரித வழியில் சென்ற ஒரு பேருந்தை, துப்பாக்கி ஏந்திய குழு ஒன்று மறித்து சுட்டதில், Mary Abud மற்றும் Regina Roba என்ற இரு அருள்சகோதரிகள் உட்பட, ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

பொருளற்ற முறையில் நடைபெற்றுள்ள இந்த வன்முறையை கண்டனம் செய்வதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு அருள்சகோதரிகளின் தியாகம், அந்நாட்டில் அமைதியையும், ஒப்புரவையும் உருவாக்கவேண்டுமென தான் இறைவேண்டல் புரிவதாகவும் இந்தத் தந்திச் செய்தியில் கூறியுள்ளார்.

இறைவனடி சேர்ந்த இவ்விரு சகோதரிகளின் துறவு சபைக்கும், அவ்விரு அருள்சகோதரிகளின் குடும்பத்தாருக்கும் தன் ஆழந்த அனுதாபங்களையும், செபங்களையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

Torit மறைமாவட்டத்தின் Loa என்ற பங்குத்தளத்தில் அமைந்துள்ள விண்ணேற்பு அன்னை மரியாவின் ஆலயத்தில் நடைபெற்ற நூற்றாண்டு கொண்டாட்டங்களை நிறைவு செய்து, ஒன்பது அருள் சகோதரிகளும், கத்தோலிக்க விசுவாசிகளும் Juba நோக்கி பேருந்தில் பயணம் செய்த வேளையில் நடைபெற்ற இந்த தாக்குதலில், இரு அருள்சகோதரிகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர் என்று, திரு இருதய அருள்சகோதரிகள் சபையின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

உலகில் புதிதாக உருவாக்கப்பட்ட நாடு என்று அறியப்படும் தென் சூடான், 2011ம் ஆண்டு ஒரு தனி நாடாக உருவானதிலிருந்து, இன்றுவரை அங்கு தொடர்ந்துவரும் மோதல்களில், கடந்த பத்தாண்டுகளில், 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

18 August 2021, 14:38