தேடுதல்

நற்செய்தி அறிவித்தல் என்பது, மதமாற்றத்தைக் குறிப்பதல்ல

திருத்தந்தை : திருஅவையும் பல்வேறு சிரமங்களை எப்போதும் சந்தித்துக் கொண்டிருக்கிறது; உயிரூட்டமுடன் இருக்கும் எதுவும் நெருக்கடிகளைச் சந்திப்பது இயல்பே

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

‘பயணிக்கும் திருஅவை’ என்ற தலைப்பில், ஆகஸ்ட் மாதத்திற்குரிய செபக்கருத்தை ஒரு காணொளிப் பதிவாக வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவைக்குரிய குறிப்பிட்ட பணி என்பது, நற்செய்தி அறிவித்தல் ஆகும் என, தன் காணொளிப் பதிவில் கூறும் திருத்தந்தை, திருஅவையின் அழைப்பும், அதன் தனி அடையாளமும் நற்செய்தி அறிவித்தல் என்பது, மதமாற்றத்தைக் குறிப்பவை அல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

நம் வாழ்வில் இறைவனின் விருப்பத்தை, திட்டத்தை நாம் பகுத்தறிந்து, அதன் வழி தூய ஆவியாரின் வழிகாட்டுதலுடன், நம் வாழ்வை வடிவமைத்துக் கொள்வதன் வழியாகவே, திருஅவையைப் புதுப்பிக்கமுடியும் எனவும், தன் பதிவில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு தனிமனிதனாக நாம் ஒவ்வொருவரும் நம்மை மாற்றியமைப்பதே திருஅவையின் புதுப்பித்தல், அல்லது உருமாற்றம் ஆகும் என உரைக்கும் திருத்தந்தை, இறைவனின் கொடையாக வரும் தூய ஆவியாரை, நம் இதயத்தில் அனுமதித்து, இயேசு நமக்கு கற்பித்தவைகளை செயல்படுத்துவதற்குரிய உதவியை அவரிடம் நாடுவதே நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

நம்மை நாம் மாற்றியமைப்பது, அல்லது சீர்திருத்துவதன் வழியாக, திருஅவையை சீர்திருத்துவோம் என உரைக்கும் திருத்தந்தை, தவறான முன்யோசனைகள் இல்லாமல், கருத்தியல் தப்பெண்ணங்கள் இல்லாமல், விட்டுக்கொடுக்காத மனநிலை இல்லாமல், முன்னோக்கிச் செல்ல முயல்வதை விடுத்து, ஆன்மீக வாழ்வின் அடிப்படையில், அதாவது, இறைவேண்டல், பிறரன்பு, மற்றும், பணிவாழ்வின் அனுபவத்தில் நம் வாழ்வையே முதலில் மாற்றியமைப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டிராமல், வெளியில் சென்று அனைவரையும் சந்திக்கும் முறையில், நற்செய்தி அறிவித்தலுக்குரிய நம் அமைப்பு முறைகளை மாற்றியமைப்பது என் கனவாக உள்ளது எனவும், தன் விருப்பத்தை, அந்த பதிவில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையும் பல்வேறு சிரமங்களை எப்போதும் சந்தித்துக்கொண்டிருக்கிறது என்பதைக் குறிப்பிடும் திருத்தந்தை, உயிரூட்டமுடன் இருக்கும் எதுவும் நெருக்கடிகளைச் சந்திப்பது இயல்பே என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நற்செய்தியின் ஒளியில் திருஅவை தன்னையே சீரமைக்கும் அருளையும் பலத்தையும் தூய ஆவியார் வழங்குமாறு இறைவேண்டல் செய்வோம் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சீரமைத்தல் அல்லது, மாற்றியமைத்தலின் அத்தியாவசியக் கூறுகளாக, இறைவேண்டல், பிறரன்பு, மற்றும் பணியின் முக்கியத்துவத்தை, ஆகஸ்ட் மாதத்திற்குரிய தன் இறைவேண்டல் கருத்தாக, காணொளிப் பதிவில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2021, 16:51