தேடுதல்

அருள்சகோதரி Alessandra Smerilli FMA அருள்சகோதரி Alessandra Smerilli FMA  

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் செயலர்

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் இடைக்கால செயலாளரான, 46 வயது நிரம்பிய அருள்சகோதரி Smerilli அவர்கள், பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடவுள்மீது தணியாத் தாகம் கொள்ளவும், மாற்றத்திற்குத் துணிச்சலாக முயற்சிக்கவும், அன்புகூரத் துணிவு கொள்ளவும், தொடர்ந்து முன்னேறவும் உதவுவது, நம்பிக்கை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 27, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், குறுஞ்செய்தி ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 26, இவ்வியாழனன்று, அருள்சகோதரி Alessandra Smerilli FMA அவர்களை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் இடைக்கால செயலாளராக, நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2021ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, இத்திருப்பீட அவையின் நேரடிப் பொதுச்செயலராகவும், வத்திக்கானின் கோவிட்-19 குழுவின் பொருளாதாரப் பணியின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றிவரும், இத்தாலிய அருள்சகோதரி Smerilli அவர்கள், இவ்வியாழனன்று, அக்குழுவின் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் குறித்து அறிக்கை வெளியிட்ட, திருப்பீடத் தகவல் தொடர்பகம், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றும், கர்தினால் பீட்டர் டர்க்சன், அருள்சகோதரி Smerilli, அந்த அவையின் குடிபெயர்ந்தோர், மற்றும், புலம்பெயர்ந்தோர் பிரிவின் நேரடிப்பொதுச்செயலர் அருள்பணி Fabio Baggio ஆகிய மூவரும், வத்திக்கானின் கோவிட்-19 குழுவின் மேலாண்மைப் பணியை ஆற்றுவார்கள் என்று கூறியுள்ளது.

பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள 46 வயது நிரம்பிய அருள்சகோதரி Smerilli அவர்கள், சலேசிய சபையைச் சார்ந்தவர், மற்றும், இவர், திருப்பீடத்தில், இத்தகைய முக்கிய பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் அருள்சகோதரி ஆவார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் செயலராகப் பணியாற்றிய பிரான்ஸ் நாட்டு அருள்பணி Bruno Marie Duffé அவர்களும், உதவிச் செயலராகப் பணியாற்றிய அர்ஜென்டீனா நாட்டு அருள்பணியாளர் Augusto Zampini அவர்களும், அவரவர் மறைமாவட்டங்களுக்குத் திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, அருள்சகோதரி Smerilli அவர்கள், இடைக்காலச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2021, 15:08