தேடுதல்

புனித ஆன்ட்ரு கிம் புனித ஆன்ட்ரு கிம்  

தென்கொரிய கத்தோலிக்கர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

கடவுளின் அன்பு எப்போதும் பகைமையை வெற்றி காணும் சக்தியுடையது என்பதை மகிழ்ச்சி நிறை நம்பிக்கையுடன் தன் உடனுழைப்பாளர்களுக்கு காண்பித்தவர் புனித Andrew Kim

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தென் கொரியாவின் முதல் கத்தோலிக்க அருள்பணியாளர் புனித Andrew Kim Taegon அவர்களின் 200வது பிறந்தநாள் கொண்டாட்டங்களையொட்டி, உரோம் நகர் வாழ் தென்கொரிய மக்களுக்கு சிறப்புச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சித்ரவதைகளும் துயர்களும் நிறைந்த காலங்களில், தன் விசுவாசம், மற்றும் சோர்வற்ற நற்செய்தி அறிவிப்பின் சாட்சியாக விளங்கிய புனித Andrew Kim Taegon அவர்கள், இன்றும், அனைத்து கொரிய கத்தோலிக்கர்களுக்கும், ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார் என, தன் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

கடவுளின் அன்பு எப்போதும் பகைமையை வெற்றி காணும் சக்தியுடையது என்பதால், நன்மைத்தனம் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை, மகிழ்ச்சிநிறை நம்பிக்கையுடன், தன் உடனுழைப்பாளர்களுக்கு காண்பித்தவர், புனித Andrew Kim எனவும் சுட்டிக்காட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் ஏழைகளுக்காக, திருத்தந்தையின் பெயரால், கோவிட்-19 தடுப்பூசிகளை, கொடையாக அனுப்பியுள்ள தென் கொரிய மக்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் நன்றியை இச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 29 முதல் இவ்வாண்டு நவம்பர் 27 வரை, தென்கொரியாவில் சிறப்பிக்கப்படும் புனித ஆன்ட்ரு கிம் பிறந்ததன் 200வது யூபிலி ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி, ஆகஸ்ட் 21, சனிக்கிழமையன்று, புனித பேதுரு பெருங்கோவிலில், அருள்பணியாளர்கள் திருப்பேராயத்தின் புதியத்தலைவர், கொரிய பேராயர் Lazarus You Heung-sik அவர்களின் தலைமையில் நடந்த சிறப்புத் திருப்பலிக்கென திருத்தந்தையின் செய்தி அனுப்பப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2021, 14:08