தேடுதல்

திருத்தந்தையின் காணொளி - தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க...

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் பெருந்தொற்றை எதிர்த்துப் போராட, தடுப்பூசி போடுவது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தி, வட மற்றும் தென் அமெரிக்காவில் பணியாற்றும் ஆயர்கள், கர்தினால்கள் சிலருடன் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு காணொளிச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது, ஓர் அன்புச்செயல்

Ad Council மற்றும், GetVaccineAnswers.org என்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த காணொளியின் துவக்கத்தில், இஸ்பானிய மொழியில் தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ள திருத்தந்தை, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது, நாம் ஆற்றக்கூடிய ஓர் அன்புச்செயல் என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 18, இப்புதனன்று வெளியான இந்தக் காணொளியில், மனித சமுதாயத்தைக் காப்பதற்கு, இந்த தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க பலர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நன்றிகூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த தடுப்பூசி, அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்தால் மட்டுமே, இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொணரமுடியும் என்ற எண்ணத்தையும் பதிவிட்டுள்ளார்.

நம்மீதும், நம் குடும்பத்தின் மீதும் அன்பு கொண்டிருப்பதன் அடையாளமாக நாம் இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும்போது, அது, சமுதாயத்தின் மீது நாம் கொண்டிருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது என்று இச்செய்தியில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பு, மிகச் சிறிதாக இருந்தாலும், அது எப்போதும் பெரிதான ஒரு செயலே என்று கூறியுள்ளார்.

வட, தென் அமெரிக்க ஆயர்களும், கர்தினால்களும்

திருத்தந்தையைத் தொடர்ந்து, இந்தக் காணொளிச் செய்தியில், வட மற்றும் தென் அமெரிக்காவில் பணியாற்றும் ஆயர்களும், கர்தினால்களும் மக்கள் தடுப்பூசி பெறுவது ஒரு முக்கிய கடமை என்பதை வலியுறுத்தி, தங்கள் கருத்துக்களை, பதிவுசெய்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள் விடுத்த குறுஞ்செய்தியில், உலகெங்கும் பெரும் துயரங்களை விளைவித்துள்ள இந்தப் பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காப்பதற்கு, இந்த தடுப்பூசி அனைவரையும் சென்றடைவது, அரசுகள் ஒன்றிணைந்து எடுக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு முடிவு என்று கூறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பேசும் மெக்சிகோ நாட்டின் கர்தினால் Carlos Aguiar Retes அவர்கள், கோவிட் தடுப்பூசி மட்டுமே நம் அனைவருக்கும் உறுதியான ஓர் எதிர்காலத்தை உருவாக்கும் என்பதால், இந்த முயற்சியை அனைவரும் ஆதரிக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஹொண்டூராஸ் நாட்டைச் சேர்ந்த கர்தினால் Rodriguez Maradiaga அவர்கள் விடுத்த குறுஞ்செய்தியில், கோவிட் பெருந்தொற்று நமக்கு பல பாடங்களை புகட்டியுள்ளது என்றும், அவற்றில், நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளே நம்மைக் காக்கும் என்பது மிக முக்கியமான பாடம் என்றும் கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய பிரேசில் நாட்டு கர்தினால் Claudio Hummes அவர்களும், எல் சால்வதோர் நாட்டு கர்தினால் Gregorio Rosa Chavez அவர்களும், தடுப்பூசியைப் பெறுவது ஓர் அன்புச் செயல் என்று திருத்தந்தை விடுத்த அழைப்பை மீண்டும் நினைவுறுத்தியதோடு, இந்த உதவி அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

இந்தக் காணொளியில் இறுதியில், பெரு நாட்டின் பேராயர் Miguel Cabrejos அவர்கள் பேசுகையில், வட, மத்திய, தென் அமேரிக்கா மற்றும் கரீபியன் தீவுகள் அனைத்திலும் பணியாற்றும் திருஅவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதை விழைகின்றன என்று கூறியுள்ளார்.

இந்தக் காணொளிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆகஸ்ட் 18, இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "தடுப்பூசி திட்டம், பொதுவான நலனை, குறிப்பாக, மிகவும் நலிந்தோரின் நலனை வளர்ப்பதற்கு ஓர் எளிய வழி" என்ற சொற்களை பதிவுசெய்துள்ளதோடு, இந்தக் காணொளிச் செய்தியைக் காண்பதற்கு உதவியாக, https://www.youtube.com/watch?v=C-isNHmNxlQ என்ற வலைத்தள முகவரியையும் இணைத்துள்ளார்.

18 August 2021, 14:34