தேடுதல்

Vatican News
Nadia Murad  திருத்தந்தை பிரான்சிஸ் Nadia Murad திருத்தந்தை பிரான்சிஸ்  

பெண்ணுரிமை ஆர்வலர் முராது திருத்தந்தையைச் சந்தித்தார்

ஆப்கான் பெண்களின் உரிமைகள், மற்றும், சுதந்திரங்களை, தாலிபான்கள் பறித்துவிடாதபடிக்கு, உலகளாவிய சமுதாயம் நடவடிக்கை எடுக்கவேண்டும் – நொபெல் அமைதி விருது பெற்ற Murad

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈராக், மற்றும், ஆப்கானிஸ்தான் நாடுகளின் பெண்கள், மற்றும், சிறுமிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக குரல் கொடுத்துவரும் Nadia Murad என்ற மனித உரிமை ஆர்வலர், ஆகஸ்ட் 26, இவ்வியாழனன்று, வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாதியா முராத் அவர்கள், யாஸிதி சமுதாயம், படுகொலைகளால் அடைந்த துன்பங்கள்பற்றி, தான் திருத்தந்தையிடம் விரிவாக எடுத்துரைத்ததாகக் கூறினார்.

தாலிபான் ஆட்சியின்கீழ், ஆப்கான் பெண்கள் எதிர்கொள்ளவிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்த தன் கவலையை, திருத்தந்தையிடம் வெளிப்படுத்தியதாகவும்,  நெருக்கடிகளில் வாழும் பெண்கள், மற்றும், சிறுமிகளை உலகினர் மறக்கும்போது என்ன நடக்கும் என்பதை தான் அறிந்திருப்பதாகவும், முராத் அவர்கள் கூறினார்.

முராத் அவர்கள், 2018ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதைப் பெற்றபின்னர், அவ்வாண்டு டிசம்பரில், வத்திக்கானில் திருத்தந்தையை தனியே சந்தித்து உரையாடியுள்ளார்.

மேலும், இம்மாதம் 15ம் தேதி, காபூல், தாலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், முராத் அவர்கள் தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், ஆப்கான் பெண்களின் உரிமைகள் மற்றும், சுதந்திரங்களை, தாலிபான்கள் பறித்துவிடாதபடிக்கு, உலகளாவிய சமுதாயம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நாதியா முராத்

போர், மற்றும், ஆயுதம் ஏந்திய மோதல்களின்போது, அவற்றின் ஆயுதமாக, பாலியல் வன்கொடுமை இடம்பெறுவதை நிறுத்துவதற்கு முராத் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி, அவருக்கு நொபெல் அமைதி விருது அளிக்கப்பட்டது. இவர், இவ்விருதைப் பெற்ற முதல் ஈராக்கிய மற்றும், யாஸிதி இனப் பெண் ஆவார்.

தற்போது ஜெர்மனியில் வாழ்ந்துவரும் முராத் அவர்கள், படுகொலைகள், கொடூரங்கள், மற்றும், மனித வர்த்தகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், மற்றும், சிறார், குணம்பெறவும், அவர்களின் மீள்கட்டமைப்பு வாழ்வுக்கும் என்று, பிறரன்பு அமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இவர், ஐ.நா.வின் நீடித்த நிலையான வளர்ச்சித்திட்ட இலக்குகளின் ஊக்குனராகவும், ஐ.நா. தலைமைப் பொதுச்செயலரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

1993ம் ஆண்டில், ஈராக்கின் Kocho என்ற கிராமத்தில் பிறந்த முராத் அவர்கள், 2014ம் ஆண்டில், அக்கிராமத்திலிருந்து, ISIS இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, மூன்று மாதங்கள் அவர்களின் பிடியில் இருந்தவர்.

27 August 2021, 15:17