தேடுதல்

இயேசுவாக நடிக்கும் Jonathan Roumie திருத்தந்தையுடன் சந்திப்பு இயேசுவாக நடிக்கும் Jonathan Roumie திருத்தந்தையுடன் சந்திப்பு 

திருத்தந்தையுடன், "The Chosen" நடிகர் ஜோனதன் ரூமி

"The Chosen" என்ற தொலைக்காட்சி தொடரில், இயேசுவாக நடித்துவரும் ஜோனதன் ரூமி என்ற நடிகரும், இத்தொடரின் இயக்குனர் டல்லஸ் ஜென்கின்ஸ் அவர்களும், திருத்தந்தையைச் சந்தித்தனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"The Chosen", அதாவது, "தேர்ந்தெடுக்கப்பட்டவர்" என்ற பெயரில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஒரு தொடரில், இயேசுவாக நடித்துவரும் ஜோனதன் ரூமி (Jonathan Roumie) என்ற நடிகரும், இத்தொடரின் இயக்குனர் டல்லஸ் ஜென்கின்ஸ் (Dallas Jenkins) அவர்களும், ஆகஸ்ட் 11, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்தனர்.

ஆகஸ்ட் 11, புதன் மறைக்கல்வி உரைக்குப்பின் நடைபெற்ற இச்சந்திப்பிற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜோனதன் அவர்கள், குழந்தைப்பருவம் முதல் தான் கண்டுவந்த ஒரு கனவு நிறைவேறியுள்ளதாகக் கூறினார்.

2019ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் "The Chosen" தொலைக்காட்சித் தொடரில் இயேசுவாக நடித்துவரும் கத்தோலிக்கரான ஜோனதன் அவர்கள், தான் திருத்தந்தையுடன் இஸ்பானிய மொழியில் பேசியதாகவும், தனக்காக செபிக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டபோது, அவரது கண்கள் ஒளிர்விட்டதை தன்னால் காணமுடிந்ததென்றும் கூறினார்.

இந்த தொலைக்காட்சித் தொடரின் இயக்குனரும், இவஞ்செலிக்கல் சபையைச் சேர்ந்தவருமான டல்லஸ் ஜென்கின்ஸ் அவர்கள், திருத்தந்தை, தங்களைச் சந்தித்த வேளையில் மிக இயல்பாக, நகைச்சுவை உணர்வுடன் பேசியது, தன்னைக் கவர்ந்தது என்று கூறினார்.

இந்த தொலைக்காட்சித் தொடரில் ஈடுபட்டுள்ள நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் உரோம் நகரில் உள்ள பல புனிதத்தலங்களை காணும் வாய்ப்பு பெற்றதுபற்றி குறிப்பிட்ட நடிகர் ஜோனதன் அவர்கள், இயேசுவின் பாடுகளோடு தொடர்புடைய 'புனித படிக்கட்டுகளில்' முழந்தாள்படியிட்டு தான் ஏறியது, ஆன்மீக அளவில் மிகவும் சக்திவாய்ந்த ஓர் அனுபவமாக இருந்தது என்று கூறினார்.

புனித பாத்ரே பியோ அவர்கள் மீது தனக்குள்ள தனிப்பட்ட பக்தியைக் குறித்து பேசிய நடிகர் ஜோனதன் அவர்கள், கோவிட் பெருந்தொற்று துவங்கிய காலம் முதல், இப்புனிதரிடம் தான் சிறப்பாக வேண்டிவருவதாகவும், தற்போது, அவரது புனிதத்தலத்தில் அவரைக் கண்டது, மற்றொரு மறக்கமுடியாத அனுபவம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2021, 14:07