பாப்பிறை அறிவியல் கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
தொற்றுநோயியல் நிபுணரான, தாய்வான் நாட்டு முன்னாள் உதவி அரசுத்தலைவர் Chen Chien-jen, 2018ம் ஆண்டில், நொபெல் இயற்பியல் விருது பெற்ற கனடா நாட்டு பேராசிரியர் Donna Theo Strickland, ஹாலந்து நாட்டு வானியல் ஆய்வாளர் Ewine Fleur van Dishoeck, ஆகிய மூவரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாப்பிறை அறிவியல் கழகத்தின் புதிய உறுப்பினர்களாக் நியமித்துள்ளார்.
பாப்பிறை அறிவியல் கழகத்தில் இணைந்துள்ள, தாய்வான் நாட்டு 2வது குடிமகனான Chen அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்றின் முதல் அலை, தாய்வானில் பரவாமல் இருந்ததற்கு முக்கிய காரணியாகச் செயல்பட்டவர்.
WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் நடத்திய பேரவையில், தாய்வான் நாடு கலந்துகொள்வதற்குத் தடை செய்த சீனாவிற்கு எதிரான தன் கண்டனத்தைத் தெரிவித்த சென் அவர்கள், தற்போது தாய்பேய் நகரில் Sinica கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
பாப்பிறை அறிவியல் கழகத்தில், ஏற்கனவே உறுப்பினராக உள்ள தாய்வான் நாட்டு Lee Yuan-tseh அவர்கள், 1986ம் ஆண்டில் நொபெல் வேதியல் விருது பெற்றவர்.
Donna Strickland
மேலும், 62 வயது நிரம்பிய கனடா நாட்டு Donna Strickland அவர்கள், மிகுந்த அடர்த்தியும் மிகக் குறைவான நீளமும் கொண்ட ஒளிக் கற்றையை உருவாக்கியதற்காக, 2018ம் ஆண்டின் நொபெல் இயற்பியல் விருதை, Gérard Mourou என்பவரோடு இணைந்து பெற்றார். நொபெல் இயற்பியல் விருது தவிர, ஒன்பதுக்கு மேற்பட்ட அறிவியல் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
Donna Strickland அவர்கள், 55 ஆண்டுகளுக்குப் பிறகு, இயற்பியலில் நொபெல் விருது பெற்ற பெண், மற்றும், இந்தத் துறையில் நொபெல் விருது பெற்ற மூன்றாவது பெண் என்ற பெருமைக்குரியவர்.
Ewine Fleur van Dishoeck
ஹாலந்து நாட்டு, 66 வயதுநிரம்பிய Ewine Fleur van Dishoeck அவர்கள், வானியலாளர், மற்றும், வேதியியலாளர் ஆவார். பன்னாட்டு வானியல் ஒன்றியத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர், இலெய்டன் வானியல் ஆய்வுமையத்தில், அணு மூலக்கூறு பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
2001ம் ஆண்டிலிருந்து டச்சு அரசின் அறிவியல் கல்விக் கழக உறுப்பினராகவும் உள்ள இவர், அமெரிக்க ஐக்கிய நாட்டு தேசிய அறிவியல் கல்விக் கழக உறுப்பினராகவும் உள்ளார். இவர், 2015ம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் அறிவியல் உலக விருது உட்பட, பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்