தேடுதல்

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட வெனிசுவேலா வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட வெனிசுவேலா 

வெனிசுவேலா, மற்றும் ஆப்கானிஸ்தான் குறித்து திருத்தந்தை கவலை

திருத்தந்தை : ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்த துன்பகரமான வேளையில், கிறிஸ்தவர்கள் பாராமுகமாக செயல்படமுடியாது, இறைவேண்டல், மற்றும் உண்ணாநோன்பு வழியாக உதவவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பெருமழையாலும், நிலச்சரிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலா நாட்டின் Merida மாநிலத்து மக்களோடு தன் அருகாமையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 29, ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின், வெனிசுவேலா நாட்டின் வெள்ளப்பெருக்கு குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பெரும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்த மக்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும், இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும், தான் இறைவேண்டல் செய்வதாக்க் கூறினார்.

வெனிசுவேலா நாட்டில் பெய்த மழையால் இதுவரை 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர், 20 பேர் காணாமல் போயுள்ளனர், 8000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேலும், ஆப்கானிஸ்தானின் அண்மைய நிலைகள் குறித்தும் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மை வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளான மக்களுடன், குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் அனைத்துக் கிறிஸ்தவர்களும் தங்கள் ஒருமைப்பாட்டை தெரிவிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஆப்கானிஸ்தானின் இன்று நிலவும் சூழலை ஆழந்த அக்கறையுடன் தான் பின்தொடர்வதாகவும், கடந்த வியாழனன்று, தற்கொலைப்படை தாக்குதலால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், மற்றும் பாதுகாப்பையும் உதவிகளையும் நாடி நிற்கும் மக்கள் ஆகியோரின் துயர்களை தானும் பகிர்வதாக, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிகழும் துன்பங்களைக் கண்டு, கிறிஸ்தவர்கள் பாராமுகமாக செயல்படமுடியாது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைந்து வாழ்வதற்கு வழிவகுக்கும் கலந்துரையாடல், மற்றும் ஒருமைப்பாட்டின் வழிகளை அவர்கள் மேற்கொள்ள, அனைத்துக் கிறிஸ்தவர்களும் இறைவேண்டல், மற்றும் உண்ணாநோன்பு வழியாக உதவவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்தவாரம் காபூல் நகரில் இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில், 200 பேர் வரை உயிரிழந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2021, 14:41