தேடுதல்

ஹெய்ட்டி நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஓரிடம் ஹெய்ட்டி நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஓரிடம்  

ஆப்கான் மற்றும் ஹெய்ட்டிக்காக செப அழைப்பு

திருத்தந்தை : உரையாடலின் வழியாக பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்போதுதான், அனைத்து மக்களும் அமைதியில் வாழமுடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

மோதல்களால் பல்வேறு துயர்களை அனுபவித்துவரும் ஆப்கான் நாடு, மற்றும் அண்மைய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி நாடு ஆகியவை குறித்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயுதங்கள் மீதான மோகம் களையப்பட்டு, உரையாடலின் வழியாக ஆப்கான் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உதவ, அமைதியின் ஆண்டவரை விண்ணப்பிக்க, தன்னோடு சேர்ந்து செபிக்குமாறு அனைவரையும் அழைப்பதாக, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளை நோக்கி உரைத்த திருத்தந்தை, இதன் வழியாக மட்டுமே அந்நாட்டின் அனைத்து மக்களும் அமைதியில் வாழமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அண்மை சில மணி நேரங்களில் ஹெய்ட்டி நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பல உயிரிழப்புக்களும், காயங்களும், பொருட்சேதங்களும் இடம்பெறுள்ளதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுடனும் தன் அருகாமையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்காக இறைவனை நோக்கி செபிக்கும் அதேவேளையில், பாதிக்கப்பட்டோருக்கு, ஊக்கத்தின் வார்த்தைகளை வெளிப்படுத்துவதாகவும், இவர்களை குறித்த அனைத்துலக சமுதாயத்தின் நல் அணுகுமுறையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பெருந்துயரின் விளைவுகளை அகற்ற, அனைத்து மக்களின் ஒருமைப்பாட்டுணர்வு உதவுவதாக எனவும் வேண்டினார்.

ஹெய்ட்டியில் சனிக்கிழமையன்று இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 304 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1800 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் இன்னும் தொடர்ந்துவருகின்றன.

15 August 2021, 13:18