தேடுதல்

Vatican News
உரோம் புனித மேரி மேஜர் பெருங்கோவிலிலுள்ள Salus Populi Romani மரியன்னை திருஉருவம் உரோம் புனித மேரி மேஜர் பெருங்கோவிலிலுள்ள Salus Populi Romani மரியன்னை திருஉருவம்   (Vatican Media)

"Salus Populi Romani" அன்னையைக் காண அழைப்பு

590ம் ஆண்டு, உரோம் நகரில் கொள்ளை நோய் பரவியிருந்த வேளையில், திருத்தந்தை பெரிய கிரகரி அவர்கள், "Salus Populi Romani" திருஉருவப்படத்தை நகரெங்கும் ஊர்வலமாக எடுத்துச்சென்றார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரில் உள்ள மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று, அங்கு வணங்கப்பட்டுவரும் "Salus Populi Romani", அதாவது, "உரோம் மக்களின் மீட்பு" என்ற பெயருடன் அமைந்துள்ள அன்னை மரியாவின் திருஉருவப்படத்தைக் கண்டு செபிக்கும்படி, கடந்த ஆண்டும், இவ்வாண்டும், கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மூவேளை செப உரையில், மக்களிடம் அழைப்புவிடுத்தார்.

திருத்தந்தை விடுத்த இந்த அழைப்பின் முக்கியத்துவம் என்ன என்பதை, மேரி மேஜர் பெருங்கோவிலின் பொறுப்பாளர்களில் ஒருவரான அருள்பணி John Abruzzese அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டியில் விளக்கிக் கூறினார்.

அன்னை மரியாவின் பெயரால் உலகெங்கும் எழுப்பப்பட்டுள்ள ஆலயங்களில் மிகப் பழமையானதும், முக்கியமானதுமான மேரி மேஜர் பெருங்கோவில், ஒவ்வோர் ஆண்டும், இலட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்துவருகிறது என்றும், இந்த பெருங்கோவிலில் உள்ள "Salus Populi Romani" திருஉருவப்படம், பக்தர்களின் வருகைக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் அருள்பணி Abruzzese அவர்கள் கூறினார்.

2013ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப்பணியை ஏற்ற நாள் முதல், அவர் மேற்கொண்ட அனைத்து முக்கியமான நிகழ்வுகளிலும், அன்னை மரியாவின் இந்த திருஉருவப்படம் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம் என்றும், அருள்பணி Abruzzese அவர்கள் எடுத்துரைத்தார்.

590ம் ஆண்டு, உரோம் நகரில் கொள்ளை நோய் பரவியிருந்த வேளையில், திருத்தந்தை பெரிய கிரகரி அவர்கள், "Salus Populi Romani" திருஉருவப்படத்தை நகரெங்கும் ஊர்வலமாக எடுத்துச்சென்றார் என்றும், அன்று முதல், இந்த உருவப்படம், 'உரோம் நகரின் மீட்பாக' விளங்குகிறது என்றும், அருள்பணி Abruzzese சுட்டிக்காட்டினார்.

இந்த திரு உருவப்படத்திற்கும் இயேசு சபையினருக்கும் உள்ள தொடர்பு குறித்து, தன் பேட்டியில் குறிப்பிட்ட அருள்பணி Abruzzese அவர்கள், இந்த உருவப்படத்தின் பிரதிகள் செய்யப்படக்கூடாது என்ற தடை இருந்தாலும், இயேசு சபையினரின் மூன்றாவது உலத்தலைவர் புனித பிரான்சிஸ் போர்ஜியா அவர்கள், திருத்தந்தை 5ம் பயஸ் அவர்களிடம், 1569ம் ஆண்டு, சிறப்பான ஒரு அனுமதி பெற்று, அன்னையின் இந்த உருவப்படத்தின் பிரதிகளைச் செய்து, அவற்றை, இயேசு சபையினர் பணியாற்றும் நாடுகளுக்கு எடுத்துச்செல்ல வழி செய்தார் என்று, அருள்பணி Abruzzese சிறப்பாகக் குறிப்பிட்டார்.

கோவிட் பெருந்தொற்று, இத்தாலியையும், உலகையும் வெகுவாக வதைத்துவந்த 2020ம் ஆண்டின் மார்ச் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேரி மேஜர் பெருங்கோவிலில் உள்ள "Salus Populi Romani" திருஉருவத்திற்கு முன்னும், San Marcello ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள அறையப்பட்ட கிறிஸ்துவின் சிலுவைக்கு முன்னும் செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவண்ணம், 2020, மார்ச் 27ம் தேதி, ஆள் நடமாட்டம் ஏதுமற்ற புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், கோவிட்  பெருந்தொற்று தீரவேண்டுமென திருத்தந்தை மேற்கொண்ட சிறப்பு Urbi et Orbi வழிபாட்டில், "Salus Populi Romani" திருஉருவப்படமும், அறையப்பட்ட கிறிஸ்துவின் சிலுவையும் வைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கன.

16 August 2021, 13:58