தேடுதல்

வெடிப்பால் சேதமடைந்துள்ள பெய்ரூட்  துறைமுகக்  கிடங்கு வெடிப்பால் சேதமடைந்துள்ள பெய்ரூட் துறைமுகக் கிடங்கு 

திருத்தந்தை: லெபனோனுக்கு பன்னாட்டு உதவி அவசியம்

அன்பு லெபனோன் நண்பர்களே, உங்களைச் சந்திப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன், மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதற்கும், அமைதி மற்றும், உடன்பிறப்புச் செய்தியாக உங்கள் நாடு விளங்க, நான் தொடர்ந்து செபிக்கின்றேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புதியதொரு வாழ்வைக் கட்டியெழுப்பும் பயணத்தை மேற்கொண்டுவரும் லெபனோன் நாட்டிற்கு, பன்னாட்டு உதவிகள் வழங்கப்படுமாறு, ஆகஸ்ட் 04, இப்புதன் காலையில்,  வழங்கிய மறைக்கல்வியுரைக்குப்பின் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்ஸ் நாடு, ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஆதரவோடு லெபனோன் பற்றி நடத்திவரும் உலகளாவிய கருத்தரங்கு, நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, அன்பு லெபனோன் நண்பர்களே, உங்களைச் சந்திப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன், மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதற்கும், அமைதி மற்றும், உடன்பிறப்பு செய்தியாக லெபனோன் நாடு விளங்க, நான் தொடர்ந்து செபிக்கின்றேன் என்று கூறினார்.

கோடை விடுமுறையை முன்னிட்டு, இவ்வாண்டு ஜூலை மாதம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதன் மறைக்கல்வியுரைகளை, இப்புதனன்று, வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, பெய்ரூட் துறைமுகத்தில் இடம்பெற்ற கொடூரமான வெடிவிபத்து பற்றிக் குறிப்பிட்டார்.

பல உயிரிழப்புகளையும், பெரும் அழிவையும் கொணர்ந்த இந்த விபத்தில் இறந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், மற்றும், அதனால் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்த அனைவரையும் நினைத்துப்பார்க்கிறேன் என்றுரைத்த திருத்தந்தை, இவ்வாண்டு ஜூலை மாதம் முதல் தேதியன்று, வத்திக்கானில் லெபனோன் நாட்டு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களோடு நடத்திய இறைவேண்டல் நாள் பற்றியும் குறிப்பிட்டார்.

அந்த இறைவேண்டல் நாளில், லெபனோன் நாடு அனைத்துப் பிரச்சனைகளிலிருந்து மீண்டுவர, நம்பிக்கை எனும் கொடைக்காக இறைவனை மன்றாடினோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனோன் மக்களின் கவலைகள், ஏக்கங்கள், துன்பங்கள் போன்ற எல்லாவற்றையும், அத்தலைவர்கள் வழியாக கேட்டறிந்தேன் எனவும் கூறினார்.

பெய்ரூட் விபத்து திறந்த காயம்

மேலும், பெய்ரூட் துறைமுக வெடிப்பு பற்றி ஆசியச்செய்தியிடம் பேசிய, லெபனோன் காரித்தாஸ் இயக்குனர் அருள்பணி Michel Abboud அவர்கள், இந்த விபத்து, நாட்டு மக்கள் மத்தியில் திறந்த காயமாகவே இன்னும் உள்ளது என்று கூறினார்.

இந்த விபத்துக்குப் பொறுப்பானவர்களின் பெயர்களை அறியவும், நீதி கிடைக்கவும் மக்கள் காத்திருக்கின்றனர் எனவும், இந்த விபத்து, நாட்டின் பொருளாதார, அரசியல், மற்றும், சமுதாயச் சூழல்களை அதிகம் பாதித்துள்ளது என்றும், அருள்பணி Michel Abboud அவர்கள் கூறினார். (AsiaNews)

பெய்ரூட் நகரின் துறைமுகம் அருகே 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் சேமித்துவைக்கப்பட்டிருந்த கிடங்கில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி இடம்பெற்ற வெடிப்பில், 137 பேருக்குமேல் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2021, 12:45