தேடுதல்

உரோம் வீடற்றவர்கள் திருத்தந்தை குணமடைய இறைவேண்டல்

அன்புக்குரிய திருத்தந்தையே, உங்களின் நலவாழ்வுக்காகச் செபிக்கின்றோம். எங்களுக்கென்று ஓர் இல்லம் இருக்கிறது, அதற்காக நாங்கள் தங்களுக்கு நன்றி சொல்கிறோம் – உரோம் வீடற்ற ஏழைகள் குழு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில், பெருங்குடல் பிரச்சனை தொடர்பான நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, அங்கேயே ஓய்வெடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அம்மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் மற்ற நோயாளிகளும் விரைவில் குணம்பெறவேண்டும் என்று, உரோம் நகரில் வாழ்கின்ற வீடற்ற ஏழைகள் இறைவேண்டல் செய்தனர்.

உரோம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பின் வழிகாட்டுதலில், வீடற்ற ஏழைகள் சிலர், ஜூலை 09, இவ்வெள்ளி மாலையில், ஜெமெல்லி மருத்துவமனைக்கு மலர்க்கொத்துடன் சென்று, அவ்விடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் உருவத்தின் முன்பாகச் செபித்தனர். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கொடுப்பதற்காக, தாங்கள் வைத்திருந்த மடலையும், மலர்க்கொத்தையும், அம்மருத்துவமனை அதிகாரி ஒருவரிடம் சமர்ப்பித்தனர்.

வத்திக்கானுக்கு அருகில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏழைகளுக்கென்று வழங்கியுள்ள, Migliori அடுக்குமாடி கட்டடத்திலும், சான் எஜிதியோ அமைப்பைச் சார்ந்த மையங்களிலும், நீண்ட காலமாக வீடின்றி வாழ்ந்துவருகின்ற, கைவிடப்பட்ட வறியோர் பிரதிநிதிகள் குழு ஒன்று, ஜெமெல்லி மருத்துவமனை சென்று, திருத்தந்தைக்காகவும், மற்ற நோயாளிகளுக்காகவும் செபித்தது.

அன்புக்குரிய திருத்தந்தையே, உங்களின் நலவாழ்வுக்காகச் செபிக்கின்றோம் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு, ஜெமெல்லி மருத்துவமனைக்குச் சென்ற அந்த ஏழைகள் குழு, எங்களுக்கென்று ஓர் இல்லம் இருக்கிறது, அதற்காக நாங்கள், தங்களுக்கு நன்றி சொல்கிறோம் என்று கூறியது.

திருத்தந்தையே, நாங்கள் தங்களை மிகவும் அன்புகூர்கிறோம், தாங்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை மன்றாடுகிறோம் என்று, திருத்தந்தைக்கென எழுதியிருந்த மடலில் குறிப்பிட்டுள்ள அந்த வீடற்ற வறியோர் குழு, திருத்தந்தை மீது தங்களுக்கு இருக்கின்ற பாசம், மற்றும், அருகாமையையும் வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 11, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை, ஜெமெல்லி மருத்துவமனையில், தான் சிகிச்சை பெற்றுவரும் பத்தாவது மாடியிலிருந்து வழங்குவார் என்று, திருப்பீட தகவல் தொடர்புத்துறையின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்தார்.

திருத்தந்தை குணமடைந்து வருகிறார்

ஜூலை 04, கடந்த ஞாயிறு மாலையில், இடம்பெற்ற மூன்று மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப்பின், தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பணிகளை மெல் மெல்ல ஆற்றத் துவங்கியுள்ளார், இரத்தப் பரிசோதனை முடிவுகள், நெகடிவ் என்றே காட்டுகின்றன என்று, மத்தேயோ புரூனி அவர்கள், ஜூலை 10, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

மருத்துவ, மற்றும், நலப் பணியாளர்களின் அர்ப்பணத்தை நேரில் கண்டுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளிகள், குறிப்பாக, மிகவும் நலிவுற்றோருடன் நல்லுறவோடு, தங்களின் முகங்களில் பரிவன்பை வெளிப்படுத்தி, பணிகளை ஆற்றும் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார் என்று, மத்தேயோ புரூனி அவர்கள், கூறியுள்ளார்.

10 July 2021, 15:14