தேடுதல்

லெபனான் அமைதியை மையப்படுத்தி திருத்தந்தையும் கிறிஸ்தவத் தலைவர்களும் மேற்கொண்ட சந்திப்பு லெபனான் அமைதியை மையப்படுத்தி திருத்தந்தையும் கிறிஸ்தவத் தலைவர்களும் மேற்கொண்ட சந்திப்பு  (Vatican Media)

லெபனான் அமைதிக்கென திருத்தந்தையின் விண்ணப்பங்கள்

லெபனான் நாடு, தற்போது சந்தித்துவரும் பெரும் நெருக்கடிகளிலிருந்து மீண்டெழுந்து தன் அமைதியான, நம்பிக்கை நிறைந்த முகத்தை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாடு, தற்போது சந்தித்துவரும் பெரும் நெருக்கடிகளிலிருந்து மீண்டெழுந்து, தன் அமைதியான, நம்பிக்கை நிறைந்த முகத்தை இவ்வுலகிற்கு வெளிப்படுத்தவேண்டும், என்ற கருத்துடன், ஜூலை 1ம் தேதி, வத்திக்கானில் நடைபெறும் இறைவேண்டல் நாளுக்கென அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 29, இச்செவ்வாயன்று, தன் மூவேளை செப உரையின் இறுதியில் மக்களிடம் கூறினார்.

கேதுரு மரத்தை அடையாளமாகக் கொண்டிருக்கும் லெபனான்

ஜூன் 29 சிறப்பிக்கப்பட்ட புனித பேதுரு, புனித பவுல் பெருவிழாவன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்தோருக்கு மூவேளை நண்பகல் செப உரை வழங்கிய திருத்தந்தை, அவ்வுரையின் இறுதியில், நிரந்தரத்தன்மையின் அடையாளமான கேதுரு மரத்தை தன் நாட்டின் அடையாளமாகக் கொண்டிருக்கும் லெபனான் நாடு, அமைதியில் நிலைபெறுவதற்கு செபிக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

கோவிட பெருந்தொற்று பிரச்சனையுடன், வேறு பல பிரச்சனைகளைச் சந்தித்துவந்த லெபனான் நாட்டில், 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த மாபெரும் வெடிவிபத்து, அந்நாட்டை, பெரும் வேதனையில் ஆழ்த்தியதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டிற்கென, பல்வேறு தருணங்களில், இறைவேண்டல் விண்ணப்பங்களை வெளியிட்டு வந்தார்.

பெய்ரூட் வெடிவிபத்தைத் தொடர்ந்து விண்ணப்பங்கள்

ஆகஸ்ட் 4ம் தேதி, பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடிவிபத்தை மனதில் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே ஆண்டு, செப்டம்பர் 4ம் தேதி, வெள்ளிக்கிழமையை, லெபனான் நாட்டிற்காக இறைவேண்டலும், உண்ணாநோன்பும், மேற்கொள்ளும் உலக நாளாகக் கடைபிடிக்கும்படி, உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

செப்டம்பர் 2, புதனன்று, வத்திக்கானின் புனித தமாசோ சதுக்கத்தில், தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை, இவ்வுரையைக் கேட்க, லெபனான் நாட்டுக் கொடியுடன் வந்திருந்த அருள்பணி பயிற்சியிலிருந்த மாணவர் ஒருவரை, தன் அருகில் அழைத்து, அந்நாட்டுக் கொடியை அவருடன் இணைந்து பற்றியவாறு, அந்நாட்டிற்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.

கிறிஸ்து பிறப்பு, உயிர்ப்புப் பெருவிழா Urbi et Orbi செய்திகள்

லெபனான் நாட்டில் பணியாற்றும் மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Béchara Boutros Raï அவர்கள் வழியே, 2020ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24ம் தேதி, லெபனான் நாட்டு மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய ஒரு தனிப்பட்ட மடலில், கடவுள் நம்மோடு என்ற செய்தியைக் கொணரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, லெபனான் மக்களுக்கு, அமைதியையும், நம்பிக்கையும் வழங்க தான் சிறப்பாக இறைவேண்டல் புரிவதாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, டிசம்பர் 25ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2020ம் ஆண்டுக்கென வழங்கிய Urbi et Orbi செய்தியிலும், லெபனான் நாட்டிற்கு, அனைத்துலக சமுதாயம் ஆற்றவேண்டிய கடமைகளைச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இவ்வாண்டு ஏப்ரல் 4ம் தேதி, உயிர்ப்புப் பெருவிழாவுக்கென திருத்தந்தை வழங்கிய Urbi et Orbi செய்தியில், மீண்டும் ஒருமுறை, லெபனான் நாட்டின் அமைதி, மற்றும், பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, விண்ணப்பங்களை வெளியிட்டார்.

லெபனான் நாட்டிற்கு செல்ல ஆர்வம்

இதற்கிடையே, இவ்வாண்டு மார்ச் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து உரோம் நகருக்குத் திரும்பிவந்த விமானப்பயணத்தில், தான், லெபனான் நாட்டிற்கு, திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள விழைவதாகக் கூறினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லெபனான் நாட்டில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்களுக்கென தொடர்ந்து விண்ணப்பங்களை எழுப்பிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 1, இவ்வியாழனன்று, லெபனான் நாட்டின் அமைதிக்கென அந்நாட்டு கிறிஸ்தவ தலைவர்களுடன், வத்திக்கானில் இறைவேண்டல் நாளை தலைமையேற்று நடத்தினார்.

01 July 2021, 13:20