தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வி உரை புதன் மறைக்கல்வி உரை  

ஆண்டவர், எந்நாளும் நமக்கு அருகில் இருக்கிறார்

வயதுமுதிர்ந்தோருக்கு மரியாதை செலுத்துவது, அவர்கள் வாழ்வையும், அவர்கள் கடந்துவந்த பயணங்களையும் மதிப்பதாகும், மற்றும், அவர்களின் அனுபவங்களிலிருந்து கிடைக்கும் நன்மைகளை, நமக்கென எடுத்துக்கொள்வதாகும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜூலை 25, இஞ்ஞாயிறன்று, திருஅவையில் முதன்முறையாகச் சிறப்பிக்கப்படும், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், வயதுமுதிர்ந்தோர் உலக நாளின் கருப்பொருளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 24, இச்சனிக்கிழமையன்று, டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“புதிய அழைப்புகள், புதிய சொற்கள், மற்றும், தம் ஆறுதல்கள் ஆகியவை வழியாக, ஆண்டவர், எந்நாளும் நமக்கு அருகில் இருக்கிறார். ஆண்டவர் முடிவில்லாதவர். அவர் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் (IamWithYouAlways) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.

தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும், வயதுமுதிர்ந்தோர், முதல் உலக நாள், “உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்.28:20) என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படுகிறது.

மேலும், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், வயதுமுதிர்ந்தோர் முதல் உலக நாளையொட்டி அனைத்துக் கண்டங்களின் ஆயர்களும், சிறப்பு மேய்ப்புப்பணி அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியத் திருஅவை

ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் வாழ்வு மற்றும், குடும்பப் பணிக்குழுவின் தலைவரான, மெல்பர்ன் பேராயர் Peter Comensoli அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவர்களுக்கென்று ஒரு விழாவைச் சிறப்பிப்பது, மனிதர்கள், மற்றும், நம்பிக்கையாளர்களாக, நாம் உருவாக்கப்பட்டதில், அவர்கள் ஆற்றிய பங்கை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு நன்றி கூறுவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வயதுமுதிர்ந்தோருக்கு மரியாதை செலுத்துவது, அவர்கள் வாழ்வையும், அவர்கள் கடந்துவந்த பயணங்களையும் மதிப்பதாகும், மற்றும், அவர்களின் அனுபவங்களிலிருந்து கிடைக்கும் நன்மைகளை, நமக்கென எடுத்துக்கொள்வதாகும் என்றும் பேராயர் Comensoli அவர்கள் கூறியுள்ளார்.

அனைத்துப் பங்குத்தளங்களும், பள்ளிகளும், கத்தோலிக்கத் திருப்பணியாளர்களும், குழுக்களை நியமித்து, அக்குழுக்கள், வயதுமுதிர்ந்தோரைச் சந்திக்குமாறு ஊக்கப்படுத்தவேண்டும் எனவும், பேராயரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் நான்காம் ஞாயிறு

இயேசுவின் தாத்தா பாட்டியான, புனிதர்கள் சுவக்கீன், அன்னா, ஆகிய இருவரின் திருநாளையொட்டி, தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், வயதுமுதிர்ந்தோர் உலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது. ஜூலை 26ம் தேதி, இப்புனிதர்களின் திருநாளாகும்.

24 July 2021, 15:08