தேடுதல்

Vatican News
கொல்லப்பட்ட ஹெய்ட்டி அரசுத் தலைவர் Jovenel Moise, அவர் மனைவியுடன் (23 மே 2018) கொல்லப்பட்ட ஹெய்ட்டி அரசுத் தலைவர் Jovenel Moise, அவர் மனைவியுடன் (23 மே 2018)  (AFP or licensors)

அமைதியும் இணக்கமும் நிறைந்த வருங்காலத்திற்கு அழைப்பு

திருத்தந்தை : பொதுநலனையும் நாட்டுநலனையும் மனதில்கொண்டு உடன்பிறந்த உணர்வுடன் இணைந்துவாழ, ஹெய்ட்டி நாட்டின் வன்முறைத் தொடர்நிகழ்வுகள் முடிவுக்கு வரவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹெய்ட்டி நாட்டில், குற்றக் கும்பல்களும், முரண்பாட்டு குழுக்களும் ஆயுதங்களைக் களைந்துவிட்டு, அமைதியும் இணக்கவாழ்வும் நிறைந்த பாதையைத் தேர்ந்துகொள்வதற்கு முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை மாதம் 7ம் தேதி அதிகாலையில் ஹெய்ட்டி நாட்டு அரசுத்தலைவர் Jovenel Moise அவர்கள் கொலைச் செய்யப்பட்டது குறித்து ஜூலை 11, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், தன் ஆழ்ந்த கவலையை மீண்டுமொருமுறை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுதங்களைக் கைவிடவும், வாழ்வின் பாதையைத் தேர்ந்துகொள்ளவும், பொதுநலனையும் நாட்டுநலனையும் மனதில்கொண்டு உடன்பிறந்த உணர்வுடன் இணைந்து வாழவும், அந்நாட்டு ஆயர்கள் விடுத்துள்ள அழைப்புடன் தன் குரலையும் இணைத்துக்கொள்வதாகத் தெரிவித்தார்.

அறுவைச் சிகிச்சைக்குப்பின், தான் ஓய்வெடுத்துவரும் உரோம் நகர் ஜெமெல்லி மருத்துமனையின் மேல்மாடத்திலிருந்து மூவேளை செப உரை வழங்கியபின், இவ்வழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி மற்றும் இணக்கத்தை நோக்கிய வருங்காலப் பாதையை மீண்டும் துவக்கி வைக்க, ஹெய்ட்டி நாட்டின் வன்முறைத் தொடர் நிகழ்வுகள் முடிவுக்கு வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

இதற்கிடையே, அரசுத்தலைவரின் கொலையாளிகளால் சுடப்பட்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் மியாமி மருத்துவமனையில் தீவிரசிகிச்சைப் பெற்றுவரும் அரசுத்தலைவரின் மனைவி Martine Moise அவர்கள் விடுத்துள்ள அழைப்பில், நாடு தன் சரியான பாதையை விட்டு விலகிச்செல்ல நாம் அனுமதிக்கக்கூடாது, மற்றும், சிந்தப்பட்ட அரசுத்தலைவரின் இரத்தம் எவ்வித பலனும் இல்லாமல் போய்விடக்கூடாது' என்று கூறி, நாட்டின் அமைதிக்கு விண்ணப்பித்துள்ளார்.

11 July 2021, 13:02