தேடுதல்

சீரோ-மலபார் ஆயர்களின் அத் லிமினா சந்திப்பு சீரோ-மலபார் ஆயர்களின் அத் லிமினா சந்திப்பு  

சீரோ-மலபார் திருஅவைக்கு திருத்தந்தை மடல்

திருநற்கருணை கொண்டாட்டம் குறித்த விதிமுறைகளை, சீரோ-மலபார் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையோடு நடைமுறைப்படுத்துமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கேரளாவின் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை திருஅவையின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவிகள் மற்றும், பொதுநிலையினருக்கு, திருநற்கருணை கொண்டாட்டம் பற்றிய மடல் ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1999ம் ஆண்டில், சீரோ-மலபார் திருஅவையின் பொதுப்பேரவையில், திருப்பலி திருவழிபாடு பற்றி, ஒரேமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சடங்குமுறைகளை திருப்பீடம் அங்கீகரித்து அதை நடைமுறைப்படுத்துமாறு ஊக்கப்படுத்தியது என்று, தன் மடலில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்த உடன்பாடு, அத்திருஅவை முழுவதன் ஒன்றிப்புக்கும், நிலையானதன்மைக்கும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.

சீரோ-மலபார் திருஅவையில், Holy Qurbana என்றழைக்கப்படும் திருப்பலி சடங்குமுறைகள் பற்றிய இந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது, இரண்டாயிரமாம் மாபெரும் யூபிலி ஆண்டில் அத்திருஅவையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாக இருந்தது என, திருத்தந்தை கூறியுள்ளார்.

திருப்பலி சடங்குமுறைகள் குறித்த விதிமுறைகள், அத்திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும், குறிப்பாக, மறைப்பணித்தளங்களுக்கும் குறிப்பிடத்தக்க பலன்களைத் தந்துள்ளன என்று கூறியுள்ள திருத்தந்தை, சீரோ-மலபார் திருஅவை, ஒன்றுசேர்ந்து செயல்படுமாறு, வலியுறுத்திக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமையே, மோதல்களைத் தவிர்க்கும் வழி என்பதை, தன் மடலில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, திருப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்ட, திருப்பலி சடங்குமுறைகள் குறித்த விதிமுறைகளை, சீரோ-மலபார் திருஅவையின் அனைத்து ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவிகள் மற்றும், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஒற்றுமையோடு நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சீரோ-மலபார் திருஅவையினர் மத்தியில், நல்லிணக்கம், உடன்பிறந்த உணர்வு, மற்றும், ஒற்றுமை ஆகியவை வளர தூய ஆவியார் உதவுவாராக என்றுரைத்து, அத்திருஅவையினருக்கு தனது ஆசீரையும், அருகாமையையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மடலில் தெரிவித்துள்ளார்.   

06 July 2021, 15:33