உண்மை நிலைகள் குறித்த புதிய கண்ணோட்டம் தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் சமூகத்தொடர்புத்துறையின் முன்னாள் இயக்குனர், அருள்பணி Dario Viganò அவர்களின் புதிய நூலுக்கு நேர்முகம் ஒன்றை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட் பெருந்தொற்றிற்குப்பின், உண்மை நிலைகள் குறித்த புதிய கண்ணோட்டம் நமக்குத் தேவைப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
'கூர்ந்து நோக்குதல் : இதயத்தின் வாசல். நினைவிற்கும் மெய்ம்மை நிலைக்கும் இடையே நிலவும் நடப்பியல்வாதம்' என்ற தலைப்பில் அருள்பணி விகானோ அவர்கள் வெளியிட்டுள்ள நூலின் துவக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நேர்முகத்தில், திரைப்படம் வழியாக ஒரு தெளிவான கண்ணோட்டத்தை நாம் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தையும், உருவ வடிவங்கள் வழியாக, நாம், நினைவுகளை பாதுகாக்க முடியும் என்பதையும், திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
திரைப்படம் உட்பட, கலைகளின் பல்வேறு வடிவங்களைப் பாராட்ட, தன் பெற்றோர் தனக்கு பெரிய அளவில் உதவியுள்ளதாக அந்த நேர்முகத்தில் தெரிவிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திரைப்படங்களின் வழியாக, இரண்டாம் உலகப்போரின் பாதிப்புக்கள் குறித்து தான் அதிகம் அதிகமாக அறிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நடப்பியல், அல்லது எதார்த்தநிலைகள் குறித்து எடுத்துரைக்கும் திரைப்படங்களை 'மனிதகுல மறைக்கலவி', அல்லது 'மனிதாபிமானக் கல்விக்கூடம்' என பலமுறை குறிப்பிட்டுள்ளதைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இரக்கமும் நன்றியுணர்வும் இறைவனிடமிருந்து இறங்கிவருகின்றன, அவைகளை வழங்கும் பார்வையும், பெறுபவரின் பார்வையும் சந்திக்கும் இடத்தில் இறைவன் இருக்கிறார்' என்று, மறைஞானி Simone Weil அவர்கள் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, தெளிவாக நோக்குவது குறித்த கல்வியின் முக்கியத்துவத்தை திரைப்படங்களின் வழியாக கண்டுகொள்வது சிறப்புமிக்கது என எடுத்துரைத்துள்ளார்.
நடப்பியல்வாதம், அல்லது எதார்த்தநிலைகளை உற்றுநோக்குவது என்பது, நம் மனச்சான்றைத் தட்டியெழுப்புகிறது, ஏனெனில், எதார்த்தநிலையை அப்படியேக் காண்பது என்பது, குழந்தைகளின் கண்கொண்டு நோக்குவதாகும், எனக்கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த தெளிவான பார்வையினால் பெறும் நம்பிக்கையையும், புன்னகையையும் அழியாமல் காக்கவேண்டிய கடமையை வலியுறுத்தியுள்ளார்.
திரைப்படங்கள், வரலாற்றிற்குள் சென்று மட்டுமல்ல, மனிதர்களின் இதயங்களுக்குள்ளும் சென்று நோக்கவேண்டும், எனக்கூறும் திருத்தந்தை, எதார்த்தநிலைகளின் திரைப்படம் என்பது, மனிதனை மேல் நோக்கி எழவைக்கிறது, நம் குறுகிய கண்ணோட்டங்களை மாற்றி, உலகின் உண்மை நிலைகள் குறித்த ஒளியைத் தருவதுடன், ஏழை மக்களுக்கு நாம் அருகில் இருக்கவேண்டியதையும் சுட்டிக்காட்டுகிறது என்று கூறியுள்ளார்.