தேடுதல்

Vatican News
2021.07.11 Papa Francesco Angelus Gemelli 2021.07.11 Papa Francesco Angelus Gemelli 

விளையாட்டின் பொருள், அதன் விழுமியங்கள் பற்றி திருத்தந்தை

விளையாட்டில் வெற்றி, தோல்வி என்று எந்தவித முடிவையும், ஏற்றுக்கொள்ளும் திறனைப் பெறும்போது, வாழ்வின் இன்னல்கள் மத்தியில், நம்பிக்கையை இழக்காமல், அவற்றை எதிர்கொள்ளச் சக்தி கிடைக்கிறது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இம்மாதம் 04ம் தேதி, ஞாயிறு மாலையில், உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில், பெருங்குடல் பிரச்சனை தொடர்பான நோய்க்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேலும் சில நாள்களுக்கு அம்மருத்துவமனையிலேயே தங்கியிருந்து, அறுவைச்சிகிச்சையைத் தொடர்ந்துவரும் மருத்துவப் பராமரிப்புக்களைப் பெறுவார் என்று, திருப்பீட தகவல் தொடர்புத்துறையின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் அறிவித்தார்.

ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நலன் பற்றி ஒவ்வொரு நாளும் தகவல்களை வெளியிட்டுவரும் மத்தேயோ புரூனி அவர்கள், ஜூலை 11, இஞ்ஞாயிறன்று, அம்மருத்துவமனையின் பத்தாவது மாடியிலிருந்து மூவேளை செப உரையை ஆற்றுவதற்குமுன்னர், திருத்தந்தை, தான் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகிலுள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் மற்றும், அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார் என்று அறிவித்தார். 

நோயாளிகளுடன் கைகுலுக்கியபின்னர், அப்பிரிவிலிருந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும், செவிலியர்களிடமும் சுருக்கமாகப் பேசியத் திருத்தந்தை, அம்மருத்துவமனையின் சிற்றாலயத்தில், தனக்கு தினமும் உதவிசெய்யும் பணியாளர்களோடு, திருப்பலி நிறைவேற்றி வருகிறார் என்று, மத்தேயோ புரூனி அவர்கள், தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெமெல்லி மருத்துவமனையில் திருத்தந்தை பிரான்சிஸ்
ஜெமெல்லி மருத்துவமனையில் திருத்தந்தை பிரான்சிஸ்

மேலும், ஜூலை 11, இஞ்ஞாயிறன்று, பிரேசிலில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில், அர்ஜென்டீனா நாடும், இங்கிலாந்தில் நடைபெற்ற யூரோ 2020 கால்பந்து இறுதி ஆட்டத்தில், இத்தாலி நாடும் வெற்றிபெற்றது குறித்த தன் மகிழ்வையும், தன்னோடு இருந்தவர்களோடு திருத்தந்தை பகிர்ந்துகொண்டார் என்றும், மத்தேயோ புரூனி அவர்கள், கூறியுள்ளார்.

அவ்வேளையில், விளையாட்டின் அர்த்தம், மற்றும், அதன் மதிப்பீடுகள் பற்றி பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளையாட்டில், வெற்றி, தோல்வி என்று, எந்தவித முடிவையும், ஏற்றுக்கொள்ளும் திறனைப் பெறும்போது, வாழ்வின் இன்னல்கள் மத்தியில், நம்பிக்கையை இழக்காமல், அவற்றை எதிர்கொள்ளச் சக்தி கிடைக்கிறது என்று கூறியதாக, மத்தேயோ புரூனி அவர்கள் கூறினார்.

13 July 2021, 14:57