தேடுதல்

Vatican News
பிரான்சிஸ்கன் துறவு சபையின் Friars Minor பிரிவின் உலகத் தலைவராக, அருள்பணி ஃபுசரெல்லி பிரான்சிஸ்கன் துறவு சபையின் Friars Minor பிரிவின் உலகத் தலைவராக, அருள்பணி ஃபுசரெல்லி 

பிரான்சிஸ்கன் Friars Minor உலகத் தலைவருக்கு திருத்தந்தை வாழ்த்து

Friars Minor பிரிவினர் நடத்திவரும் பொதுப் பேரவையில், ஜூலை 13, இச்செவ்வாயன்று, அருள்பணி ஜியோவான்னி ஃபுசரெல்லி அவர்கள், இப்பிரிவின் 121வது உலகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரான்சிஸ்கன் துறவு சபையின் 'சிறிய சகோதரர்கள்' என்று பொருள்படும் Friars Minor பிரிவின் உலகத் தலைவராக, அருள்பணி மாஸ்ஸிமோ ஜியோவான்னி ஃபுசரெல்லி (Massimo Giovanni Fusarelli) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வாழ்த்துத் தந்தியை அவருக்கு அனுப்பியுள்ளார்.

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தி கேட்டு மகிழ்கிறேன், உங்களுக்கு என் செபங்களையும், ஆசீரையும் உறுதியாக்குகிறேன். இறைவன் உங்கள் பணியில் துணையிருக்கவும், புனித பிரான்சிஸ் உங்களை வழிநடத்தவும் வேண்டிக்கொள்கிறேன் என்ற சொற்கள் அடங்கிய செய்தியை, திருத்தந்தை அனுப்பியுள்ளார்.

உலகெங்கும் பணியாற்றும் Friars Minor பிரிவின் 13,000த்திற்கும் அதிகமான உறுப்பினர்களின் 116 பிரதிநிதிகள், ஜூலை 3ம் தேதி முதல், 18ம் தேதி முடிய நடத்திவரும் பொதுப் பேரவையில், ஜூலை 13, இச்செவ்வாயன்று, அருள்பணி ஃபுசரெல்லி அவர்கள், இப்பிரிவின் உலகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Friars Minor உலகத் தலைவரின் வாழ்க்கை குறிப்பு

1963ம் ஆண்டு உரோம் நகரில் பிறந்த ஃபுசரெல்லி அவர்கள், 1982ம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவு சபையில் இணைந்து, 1989ம் ஆண்டு தன் 26வது வயதில் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார்.

துறவியரின் உருவாக்கப் பணியிலும், ஏனைய நிர்வாகப் பணிகளிலும் ஈடுபட்டிருந்த அருள்பணி ஃபுசரெல்லி அவர்கள், உரோம் நகரில், குடிபெயர்ந்தோர் மற்றும் வறியோருக்கென சிறப்பு கவனம் செலுத்தும் San Francesco a Ripa ஆலயத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றியபின், உரோம் மாநிலத் தலைவராக, 2020ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார்.

அமெரிக்க நாட்டவரான அருள்பணி மைக்கில் பெர்ரி (Michael Perry) அவர்களைத் தொடர்ந்து, பிரான்சிஸ்கன் துறவு சபையின் Friars Minor பிரிவின் 121வது உலகத் தலைவராக, இத்தாலியரான அருள்பணி மாஸ்ஸிமோ ஜியோவான்னி ஃபுசரெல்லி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

14 July 2021, 15:27