தேடுதல்

Vatican News
திருத்தந்தை, ஈராக் பிரதமர் Al-Kadhimi சந்திப்பு திருத்தந்தை, ஈராக் பிரதமர் Al-Kadhimi சந்திப்பு   (Vatican Media)

திருத்தந்தை, ஈராக் பிரதமர் Al-Kadhimi சந்திப்பு

ஈராக்கில், காலம் காலமாக வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்களின் பிரசன்னத்தைப் பாதுகாப்பதற்கு சட்டமுறைப்படி நடவடிக்கைகள் அவசியம் - திருப்பீடம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டுப் பிரதமர் முஸ்தாபா அல்-கதிமி (Mustafa Al-Kadhimi) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஜூலை 02, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்புக்குப்பின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார், ஈராக் பிரதமர் அல்-கதிமி.

இச்சந்திப்புக்கள் பற்றி அறிக்கை வெளியிட்ட, திருப்பீட செய்தித் தொடர்பகம், ஈராக்கிற்குத் திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் பற்றிய கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்றும், அச்சமயத்தில், ஈராக் மக்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டதற்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன என்றும் கூறியது.

மேலும், ஈராக்கின் உறுதியானதன்மை, மற்றும், மீள்கட்டமைப்பிற்கு, தேசிய அளவில் உரையாடல் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுவது முக்கியம் என்றும், அந்நாட்டில், காலம் காலமாக வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்களின் பிரசன்னத்தைப் பாதுகாப்பதற்கு சட்டமுறைப்படி நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என்றும், மற்ற குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே உரிமைகளும், கடமைகளும் கிறிஸ்தவர்களுக்கும் உறுதிசெய்யப்படவேண்டும் என்றும், இச்சந்திப்புக்களில் பரிந்துரைக்கப்பட்டன.

ஈராக் பகுதியின் சூழல் குறித்தும், உலகளாவிய சமுதாயத்தின் ஆதரவோடு அந்நாட்டில் நம்பிக்கை மற்றும், அமைதியான நல்லிணக்க வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் இச்சந்திப்புக்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்தது.

இவ்வாண்டு மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக்கில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார்.

02 July 2021, 15:26