தேடுதல்

Sant'Egidio அமைப்பின் தலைவர், Marco Impagliazzo அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம், 2021 ஏப்ரல் Sant'Egidio அமைப்பின் தலைவர், Marco Impagliazzo அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் - கோப்புப் படம், 2021 ஏப்ரல் 

Dino Impagliazzo மரணத்திற்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி

Dino Impagliazzo அவர்கள், வாழ்வைக்குறித்து கற்றுத்தரும் சிறந்த ஆசிரியர், அவரே, தன் பிள்ளைகளுக்கு நற்செய்தியின் வழிகளைக் கற்றுத்தந்துள்ளார் – திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உரோம் நகரில், பல்வேறு பிறரன்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் Sant'Egidio என்ற அமைப்பின் தலைவர், திருவாளர் Marco Impagliazzo அவர்களின் தந்தை, Dino Impagliazzo அவர்கள் அண்மையில் மரணமடைந்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கைப்பட எழுதிய ஓர் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.

அயராத உழைப்பு, தாராள மனம் ஆகிய நற்பண்புகளைக் கொண்ட Dino Impagliazzo அவர்கள், வாழ்வைக்குறித்து கற்றுத்தரும் சிறந்த ஆசிரியர் என்றும், அவரே, Marco Impagliazzo அவர்களுக்கு நற்செய்தியின் வழிகளைக் கற்றுத்தந்துள்ளார் என்றும் திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

மரணம் என்ற மாபெரும் மறையுண்மையில் Dino அவர்கள் கலந்துவிட்டார் என்று நம் மத நம்பிக்கை சொன்னாலும், பெற்றோர் ஒருவரின் மரணம் எப்போதும் உள்ளத்தில் வேதனையை உருவாக்குகிறது என்று தன் இரங்கல் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Marco மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரோடும் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகக் கூறியுள்ளார்.

ஜூலை 25, கடந்த ஞாயிறன்று தன் 91வது வயதில் இறையடி சேர்ந்த Dino Impagliazzo அவர்களின் அடக்கச் சடங்கு திருப்பலியை, திருத்தந்தையின் தர்மப்பணிகளுக்குப் பொறுப்பாளராக இருக்கும் கர்தினால் Konrad Krajewski அவர்கள், ஜூலை 27 இச்செவ்வாயன்று தலைமையேற்று நடத்தினார்.

உரோம் நகரிலுள்ள யூத தொழுகைக்கூடத்தின் தலைவர், Riccardo Segni, மற்றும், Dino Impagliazzo அவர்களின் பிறரன்புப் பணிகளால் பயனடைந்து, உரோம் நகரில் வாழும் வீடற்ற வறியோர் பலரும், இத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2021, 14:10