தேடுதல்

Vatican News
ஜெமெல்லி மருத்துவமனை ஜெமெல்லி மருத்துவமனை  (AFP or licensors)

ஒருவரை அக்கறையுடன் பராமரிப்பது, இதயத்தின் வெளிப்பாடு

திருத்தந்தை பிரான்சிஸ் : ஒரு மனிதனின் கலாச்சார, மற்றும் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு உதவுவது, வருங்காலத்திற்குரிய கதவுகளைத் திறப்பதாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் சிகிச்சைப் பெற்றுத்திரும்பிய ஜெமெல்லி மருத்துவமனையை உள்ளடக்கிய திரு இதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், தன் நூறாம் ஆண்டை கொண்டாடுவதை முன்னிட்டு, வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'மனிதனை பராமரிப்பதற்குரிய அழைப்பைக் கொண்டிருத்தல்' என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தினுடைய முதல்வர்  Franco Anelli அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்து மடலில், தான் அண்மையில் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது வழங்கப்பட்ட சிகிச்சைக்கு தன் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ள இவ்வேளையில், அங்கு தனக்கு கிடைத்த அக்கறையுடன் கூடிய சிகிச்சைக்கும், இன்முக பராமரிப்புக்கும்,  அம்மருத்துவமனையை நடத்தும் இந்த பல்கலைக்கழகத்திற்கு நன்றிசொல்ல விரும்புவதாக, தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திரு இதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் தன் நூற்றாண்டை சிறப்பிக்கும் இவ்வேளையில், தான் அதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது பற்றிக் குறிப்பிடும் திருத்தந்தை, 'ஒருவரை அக்கறையுடன் பராமரிப்பது, இதயத்தின் வெளிப்பாடு' என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

துயரங்களை அனுபவிக்கும் இதயங்களில் நம்பிக்கையை விதைக்கும் செயல்பாடுகளை ஜெமெல்லி மருத்துவமனை ஆற்றிவருவதை தான் நேரடியாக கண்டு அனுபவித்ததாக தன் கடிதத்தில் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதரின் கலாச்சார, மற்றும் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு உதவுவது, வருங்காலத்திற்குரிய கதவுகளைத் திறப்பதாகும், என மேலும் அந்த வாழ்த்து, மற்றும் நன்றி மடலில் எடுத்துரைத்துள்ளார்.

 

22 July 2021, 14:30