தேடுதல்

மூவேளை செபவுரையின்போது -040721 மூவேளை செபவுரையின்போது -040721  (AFP or licensors)

செப்டம்பரில் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவில் திருத்தந்தை

Eswatini நாட்டில், பொறுப்பிலுள்ளோர், கலந்துரையாடல், ஒப்புரவு, மற்றும் அமைதி தீர்வுக்கு முன்வந்து உழைக்க வேண்டுமென அழைப்புவிடுக்கிறேன் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வரும் செப்டம்பர் மாதம் 12 முதல் 15 வரை, ஹங்கேரி, மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக இஞ்ஞாயிற்றுக்கிழமை  நண்பகல் முவேளை செப உரையின் இறுதியில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஹங்கேரி நாட்டின் தலைநகர் Budapestல் செப்டம்பர் 12ம் தேதி துவங்கும் இத்திருத்தூதுப்பயணம், அந்நாட்டில் இடம்பெறும் 52வது அனைத்துலக நற்கருணை மாநாட்டு நிறைவுத் திருப்பலியை திருத்தந்தை நிறைவேற்றுவதை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த திருத்தூதுப்பயணத்திற்குத் தயாரித்துவரும் அனைவருக்கும் நன்றியுரைப்பதுடன், அவர்களுக்காகச் செபிப்பதாகவும், மற்றவர்களும் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, புடாபெஸ்ட் நகரில் 52வது அனைத்துலக நற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றியபின், ஸ்லோவாக்கியா நாட்டிற்கு செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மாதம் 15ம் தேதி வரை, Bratislava, Prešov, Košice, மற்றும் Šaštin நகர்களில் தன் திருத்தூதுப் பயணத்தைத் தொடர்வார்.

மேலும், இஞ்ஞாயிறு வழங்கிய நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், ஆப்ரிக்காவின் தென்பகுதியிலுள்ள Eswatini நாட்டில் (முன்னாள் Swaziland) இடம்பெற்றுவரும் வன்முறைகள், மற்றும் பதட்டநிலைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் பொறுப்பிலுள்ளோர், கலந்துரையாடல், ஒப்புரவு, மற்றும் அமைதி தீர்வுக்கு முன்வந்து உழைக்க வேண்டுமென அழைப்புவிடுத்தார்.

04 July 2021, 12:58