தேடுதல்

Vatican News
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜெர்மனி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜெர்மனி  (AFP or licensors)

ஜெர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தை செபம்

வட ஐரோப்பாவில் பெய்துவரும் கன மழையால், ஆறுகள் கரைபுரண்டோடுகின்றன, ஜெர்மனியில், 700 பேர் வாழ்ந்துவந்த Schuld என்ற கிராமம், ஏறத்தாழ முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேற்கு ஜெர்மனியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, பலர் உயிரிழந்துள்ளவேளை, இப்பேரிடரில் பலியானவர்கள், மற்றும், பாதிக்கப்பட்டோருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஒருமைப்பாட்டுணர்வையும், செபங்களையும் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் Rhineland-Palatinate, North Rhine-Westphalia ஆகிய இரு மாநிலங்கள், கடும் புயல் மற்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது மிகவும் கவலை தருகின்றது எனவும், இப்பேரிடரில் உயிரிழந்தவர்கள், மற்றும், காணாமல்போயுள்ளவர்களின் குடும்பங்களுக்காக, தான் சிறப்பாக கடவுளை மன்றாடுவதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

மேலும், இப்பேரிடரால் பாதிக்கப்பட்டோர், மீட்புப்பணி, மற்றும், இடர்துடைப்புப் பணிகள் ஆற்றுவோர் ஆகிய அனைவரோடும், தான் ஆன்மீக முறையில் ஒன்றித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அவர்கள் அனைவருக்கும் கடவுளின் பாதுகாப்பும், உதவியும் கிடைக்கவேண்டும் என்று தான் இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார்.

ஜெர்மனியில் இப்பேரிடரால் பாதிக்கப்பட்டோருடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொண்டிருக்கும் தோழமையுணர்வையும், செபங்களையும் குறிப்பிட்டு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஜெர்மன் அரசுத்தலைவர் Frank-Walter Steinmeier அவர்களுக்கு, ஜூலை 15, இவ்வியாழன் மாலையில், தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

வட ஐரோப்பாவில் பெய்துவரும் கன மழையால், ஆறுகள் கரைபுரண்டோடுகின்றன, ஜெர்மனியில், ஏறத்தாழ 700 பேர் வாழ்ந்துவந்த Schuld என்ற கிராமம், முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால், எண்பதுக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயுள்ளனர். படைவீரர்கள், காவல்துறையினர், அவசரகாலப் பணியாளர்கள் என்று, ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் உயிரிழப்புக்களும், அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கைப் பேரிடருக்கு, உலகளாவிய காலநிலை மாற்றமே காரணம் என்று சொல்லப்படுகின்றது.

ஜெர்மனியின் கத்தோலிக்க ஆயர்களும், பாதிக்கப்பட்டுள்ள மக்களோடு தங்களின் அருகாமை மற்றும், செபங்களை வெளியிட்டுள்ளனர்.

16 July 2021, 15:35